Shubman Gill: சச்சின், கோலி வரிசையில் எலைட் லிஸ்டில் இணைந்த கில்.. இனி MRF பிரண்ட் ஸ்டிக்கருடன் பேட்டிங்
Shubman Gill: சச்சின், கோலி வரிசையில் இணைந்துள்ளார் சுப்மன் கில். தனது பேட் பிராண்டை சியாட் என்பதில் இருந்து எம்ஆர்எஃப்க்கு மாற்றியுள்ளார். தான் இதுவரை விளையாடி வந்த சியாட் பிராண்ட் பேட்டில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதமடித்தார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் முதல் அரையிறுதி போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 264 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. இதையடுத்து சேஸிங்கில் களமிறங்கியிருக்கும் இந்தியா முதல் பவர் ப்ளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது.
எலைட் லிஸ்டில் இணைந்த கில்
இந்த போட்டியில் ஓபனராக கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து துணை கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினார். வழக்கமாக சியட் ஸ்டிக்கர் ஒட்டிய பேட்டில் விளையாடும் கில், இந்த போட்டியில் எம்ஆர்ஃப் ஸ்டிக்கர் ஒட்டிய பேட்டில் விளையாடினார்.
இந்த தொடரில் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருந்து வரும் கில் 8 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதற்கிடையே கில் தனது பேட்டில் எம்ஆர்எஃப் ஸ்டிக்கர் ஒட்டியதன் மூலம் எலைட் லிஸ்டில் இணைந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டென்டுல்கர், விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோருக்கு அடுத்தபடியாக பாரம்பரியம் மிக்க டயர் பிராண்டான எம்ஆர்எஃப் ஸ்டிக்கர் ஒட்டி விளையாடும் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தங்களது நிறுவனத்துடன் கில் ஒப்பந்தம் செய்திருப்பதை எம்ஆர்எஃப் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக எம்ஆர்எஃப் சமூக வலைத்தள பக்கத்தில், "MRF குடும்பத்துக்கு சுப்மான் கில்லை வரவேற்பதில் MRF நிறுவனம் பெருமை கொள்கிறது. மற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களின் நீடிக்கும் உறவை போல் தொடர வேண்டும்.
சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் பிரையன் லாரா போன்ற ஜாம்பவான்கள் புகழ்பெற்ற MRF பிராண்ட்டை தங்களது பேட்களில் அலங்கரித்த நிலையில், சுப்மன் கில் இந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்று, அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் எம்ஆர்எஃப் ஸ்டிக்கர் ஒட்டிய பேட் வைத்து விளையாடிய வீரர்களில் சச்சின் டென்டுலகர், விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோர் இந்திய அணி வீரர்களாகவும், மற்ற அணிகளை பொறுத்தவரை ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரெய்ன் லாரா, தென் ஆப்பரிக்கா அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் உள்ளனர். இவர்களின் வரிசையில் தற்போது கில் இணைந்திருக்கிறார்.
கில் புரொமோட் செய்யும் பிராண்ட்கள்
25 வயதாகும் இளம் பேட்ஸ்மேனான சுப்மன் கில், யு19 உலகக் கோப்பை வெற்றியாளராக திகழ்கிறார். தொடர்ந்து இந்திய அணியில் களமிறங்கிய போது ஆரம்பத்தில் யுவராஜ் சிங் பவுண்டேஷனான YouWeCan ஸ்டிக்கர் ஒட்டி விளையாடினார். அதன் பின்னர் நீண்ட காலமாக சியாட் ஸ்டிக்கர் ஒட்டி விளையாடி வந்த நிலையில், தற்போது எம்ஆர்எஃப்க்கு மாறியுள்ளார்.
கடந்த ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் துணை கேப்டனாக புரொமோட் செய்யப்பட்டார் கில். அதன் பின்னர் அவர் மீதான முக்கியத்துவம் அதிகரித்த நிலையில், தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துணை கேப்டனாக இருந்து வருகிறார்.
நைக், மெர்சிடீஸ், டியோர், கோக கோலா, டாடா கேபிடல், பீட்ஸ் பை ட்ரே, பஜாஜ் அலையன்ஸ், கேசியோ மற்றும் மை11சர்க்கிள் போன்ற பிரபல பிராண்ட்களின் விளம்பர தூதராக இருந்து வருகிறஆர் கில். அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை புரொமோட் செய்யும் முதல் விளையாட்டு வீரர் என்கிற பெருமையும் கில் பெற்றார்.
இப்போது எம்ஆர்எஃப் நிறுவனத்துடன் கில் வைத்திருக்கும் கூட்டு காரணமாக சச்சின், கோலி வரிசையில் தனித்துவமான பேட்ஸ்மேன் என பொறுப்பையும், கவனத்தையும் பெற்றுள்ளார்.
முன்னதாக, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டிகளில் சியாட் பேட்டுடன் விளையாடிய கில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதமும் அடித்தார். தற்போது எம்ஆர்ஃப் பேட் உடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கிய 8 ரன்கள் எடுத்து அவுட்டாகியுள்ளார்.

டாபிக்ஸ்