Ranji Trophy : ‘ கைவிட்ட ரோஹித்.. ஜெய்ஸ்வால்.. ரஹானே.. ஷ்ரேயாஸ்.. துபே..’ சதம் அடித்து மீட்ட ஷர்துல் தாகூர்!
Ranji Trophy : தொடர்ந்து இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே என பிரபல வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பவுலராக ஷர்துல் தாகூர், இரண்டு இன்னிங்களிலும் தனது பேட்டிங் திறமையை காட்டி, மும்பை அணியை மீட்டுள்ளார்.

Ranji Trophy : இந்திய உள்ளூர் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி டிராபி, தொடங்கி நடந்து வருகிறது. பல்வேறு அணிகள் விளையாடி வரும் இந்த போட்டிகளில், மும்பை-ஜம்மு காஷ்மீர் இடையேயான போட்டி பலத்த கவனம் பெற்றுள்ளது. காரணம், இந்திய டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, மும்பை அணியில் விளையாடுகிறார். மேலும் வருவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் முக்கிய பேட்ஸ்மேன்களும், அந்த அணியில் விளையாடுகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய மும்பை அணி, 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
முதல் இன்னிங்ஸில் மோசமான ஆட்டம்
மும்பை அணியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 4 ரன் ரோஹித் சர்மா 3 ரன், ரகானே 12 ரன், ஷ்ரேயாஸ் ஐயர் 11 ரன், சிவம் துபே 0, என முன்னணி வீரர்கள் மோசமான முறையில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக, மும்பை அணி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது. இத்தனைக்கும் ஜம்மு காஷ்மீர் அணியில், பெரிய அளவில் பரிட்சயம் இல்லாத பவுலர்களே இருந்தனர். அவர்களின் பந்து வீச்சை தாக்குக் பிடிக்க முடியாமல், முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தது, ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் விமர்சன தீயில், மேலும் எண்ணெய்யாக விழுந்தது. மும்பை அணியில் ஷர்துல் தாகூர் மட்டும் அதிபட்சமாக 51 ரன்கள் எடுத்து, நம்பிக்கை தந்தார்.
அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடிய ஜம்மு காஷ்மீர் அணி, 206 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 86 ரன்கள் பின்னிலை உடன், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணிக்கு, மீண்டும் போதிய துவக்கத்தை தர ரோஹித் சர்மா- ஜெய்ஸ்வால் கூட்டணி தவறிவிட்டது. ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிக்ஸர் விளாசினாலும், நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் ரோஹித் சர்மா 35 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
மீண்டும் முதல் இன்னிங்ஸ் போலவே ரஹானே 16 ரன், ஷ்ரேயாஸ் ஐயர் 17 ரன், ஷிவம் துபே 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் தான், முதல் இன்னிங்ஸில் மும்பை அணியை காப்பாற்றிய ஷர்துல் தாகூர்- கொடியன் கூட்டணி இணைந்தது.
பேட்ஸ்மேன்களுக்கு பாடம் எடுத்த ஷர்துல் தாகூர்
முதல் இன்னிங்ஸில் அரை சதம் அடித்த ஷர்துல் தாகூர், இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். 119 பந்துகளில் 113 ரன்கள் எடுத்த அவர், 17 பவுண்டரிகளை விளாசினார். அவருக்கு உறுதுணையாக ஆடிய கொடியன், 119 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இரு ஜோடியும் களத்தில் நிற்கும் நிலையில், இரண்டு நாட்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.
ஷர்துல் தாகூர் மற்றும் கொடியனில் சிறப்பான ஆட்டத்தால், மும்பை அணி 188 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தொடர்ந்து இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே என பிரபல வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பவுலராக ஷர்துல் தாகூர், இரண்டு இன்னிங்களிலும் தனது பேட்டிங் திறமையை காட்டி, மும்பை அணியை மீட்டுள்ளார்.

தொடர்புடையை செய்திகள்