IND vs ENG 1st Test: 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் கம்பேக்.. கங்குலி, டிராவிட், கோலி லிஸ்டில் இணைந்த சாய் சுதர்சன்
இந்தியா vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட்: ஷுப்மான் கில் தலைமையில் இந்தியா களமிறங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் நீண்ட இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு பின் சிறிய இடைவெளிக்கும் பிறகு இந்தியா மீண்டும் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளது. 2025 - 27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் முதல் போட்டியாக இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுகிறது. அதே போல் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இல்லாமல், அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடராக இது அமைகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸின் ஹெடிங்லியில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் ஷுப்மான் கில் 4வது இடத்தில் பேட்டிங் செய்கிறார். அதே நேரத்தில் கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளார்.
சாய் சுதர்சன் அறிமுகம்
ஐபிஎல் போட்டியில் சிறப்பான பேட்டிங் மூலம் கவனம் ஈர்த்து, ஆரஞ்சு தொப்பி வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் அறிமுக வீரராக களமிறங்குகிறார். அவர் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்குகிறார். அதே நேரத்தில் கருண் நாயர் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுத்துள்ளார்.