தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind Vs Eng Inning Break: ரோகித் ஷர்மா, சூர்ய குமார் யாதவ் அதிரடி! கடினமான பிட்சில் இந்தியா ரன் குவிப்பு

IND vs ENG Inning Break: ரோகித் ஷர்மா, சூர்ய குமார் யாதவ் அதிரடி! கடினமான பிட்சில் இந்தியா ரன் குவிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 28, 2024 12:07 AM IST

ரோகித் ஷர்மா, சூர்ய குமார் யாதவ் அதிரடியுடன் கூடிய பார்ட்னர்ஷிப் கடைசி கட்டத்தில் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோரின் கேமியோ ஆட்டத்தால் இந்தியா பேட்டிங் செய்ய கடினமான பிட்சில் 171 ரன்கள் குவித்துள்ளது.

ரோகித் ஷர்மா, சூர்ய குமார் யாதவ் அதிரடி, கடினமான பிட்சில் இந்தியா ரன் குவிப்பு
ரோகித் ஷர்மா, சூர்ய குமார் யாதவ் அதிரடி, கடினமான பிட்சில் இந்தியா ரன் குவிப்பு (AP)

டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கயானாவில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி நடப்பு சாம்பியன் அணியாக உள்ளது. கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் இதே இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் தோல்வியை தழுவி இந்தியா வெளியேறியது. எனவே இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் போட்டியாகவும் இந்த அரையிறுதி அமைந்துள்ளது.

இந்தியா பவுலிங்

மழையால் மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதற்கு சுமார் ஒன்றரை மணி நேரம் வரை தாமதமானது. இதன்பின்னர் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் இந்த போட்டியில் களமிறங்குகியது.

முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 57, சூர்யகுமார் யாதவ் 47, ஹர்திக் பாண்ட்யா 23 ரன்கள் அடித்தனர்.

இங்கிலாந்து பவுலர்களில் கிறிஸ் ஜோர்டன் 3, ரீஸ் டாப்லே, ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கரன், அடில் ரஷித், ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

கோலி ஏமாற்றம்

இந்த உலகக் கோப்பை தொடரில் ஓபனிங் பேட்ஸ்மேனாக புரொமோட் செய்யப்பட்ட விராட் கோலி, பேட்டிங்கில் பார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இந்த தொடரில் இதுவரை ஒரு அரைசதம் கூட அவர் அடிக்கவில்லை. தனது மோசமான பேட்டிங்கை இந்த போட்டியிலும் கோலி தொடர்ந்தார். ஆரம்பத்தில் சிக்ஸர் அடித்தபோதிலும் 9 ரன் அடித்து டாப்லே பந்தில் போல்டாகி வெளியேறினார்.

ரோகித், சூர்யகுமார் யாதவ் அதிரடி

இந்த தொடரில் இந்தியாவின் டாப் ஸ்கோரராகவும், இரண்டு அரைசதங்கள் அடித்திருந்த பேட்ஸ்மேனாகவும் இருந்து வரும் ரோகித் ஷர்மா ஆரம்பத்தில் இருந்தே தனது பாணியில் அதிரடியாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆட்டத்தில் 8 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் என இருந்தபோது மழை குறுக்கிட்டது. இதன் பிறகு சுமார் முக்கால் மணி நேரம் கழித்து போட்டி தொடங்கியது.

மழைக்கு பின்னரும் விரைவாக ரன்களை சேர்த்த ரோகித் அரைசதமடித்ததார். 39 பந்தில் 57 ரன்கள் அடித்த ரோகித் 6 பவுண்டரி 2 சிக்ஸர் அடித்தார்.

அதேபோல் சூர்ய குமார் யாதவும், ரோகித்துடன் இணைந்து விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டார். அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். 36 பந்துகளில் 47 ரன்கள் அடித்து சிக்ஸர் முயற்சியில் சூர்ய குமார் யாதவ் அவுட்டானார். தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார்.

ரோகித் - சூர்யா இணைந்து 73 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தனர். இது முக்கியமான பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. 

பாண்ட்யா, ஜடேஜா கேமியோ

கடைசி கட்டத்தில் சிறிய கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்திய பாண்ட்யா 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். அதேபோல் ஜடேஜாவும் 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து நாட்அவுட் பேட்ஸ்மேனாக உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.