RR vs LSG: 193 ரன்களை எடுத்து அதிரடி காட்டிய ராஜஸ்தான் அணி; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் லக்னோ அணி!
RR vs LSG:லக்னோ அணிக்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
RR vs LSG: லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் மார்ச் 24ஆம் தேதிக்கான முதல் ஆட்டம் பிற்பகல் 3:30 மணிக்குத் தொடங்கியது. இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் நான்காவது போட்டியான இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியானது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் சவாஸ் மான் சிங் மைதானத்தில் நடைபெற்றது.
அதன்படி டாஸ் வென்று முதல் குழுவாக களத்தில் குதித்தது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ஆரம்பத்தில் முதல் இரண்டு வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் இணை இறங்கியது. ஆனால், ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்தபோது மொஷின் கான் பந்தில், பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின், ஜாஸ் பட்லரும் நவீன் உல் ஹக்கின் பவுலிங்கில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெறும் 11 ரன்களை எடுத்த நிலையில் வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் இணை அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. ஆனால், மீண்டும் நவீன் உல் ஹக்கின் பந்தில் ரியான் பராக், 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின், களமிறங்கிய ஹெட்மயர் வெறும் 5 ரன்கள் எடுத்த நிலையில் ரவி பிஷ்னோய் பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
இடையே இரண்டு விக்கெட்கள் இழந்தாலும் நிலைத்து நின்று ஆடிய அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 52 பந்துகளில் 82 ரன்களை எடுத்தார். இதில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் மூன்று ஃபோர்களும் அடக்கம்.
தவிர, இவருக்கு கம்பெனி கொடுத்த துருவ் ஜுரெல் அவுட் ஆகாமல் 12 பந்துகளுக்கு 20 ரன் எடுத்திருந்தார். தவிர,8 எக்ஸ்ட்ரா ரன்கள் கிடைத்தன. இறுதியாக 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் ராயல் அணி 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்தது. லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்களை எடுத்துள்ளார்.
அதன்பின் இடைவேளைக்குப் பின் தொடங்கிய, போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி, மூன்று விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. லக்னோ அணியில் குவண்டின் டி குக், படிக்கல், ஆயுஸ் படோனி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடும்போது, ஆட்டம் தொடங்கிய இரண்டு பந்துகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஏழு நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. ஏனெனில், போட்டி தொடங்கிய பிறகு, ஸ்பைடர்கேமின் கம்பி அறுந்து அவுட்ஃபீல்டில் விழுந்தது. பொறியாளர்கள் உடனடியாக மைதானத்தில் ஓடி கம்பியை சுருட்டி விளையாட்டு மைதானத்திற்கு வெளியே எடுத்தனர். வர்ணனையாளராக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஹன் கவாஸ்கர், "ஸ்பைடர் கேம் உடைந்து கீழே இறங்கிவிட்டது" என்று கூறினார். இதனால் அங்கு சிறிதுநேரம் சலசலப்பு உண்டானது.
கடந்த சீசனில் உள்ளூர் மைதானத்தில் விளையாடிய 5 போட்டிகளில் 4 தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் ராயல்ஸுக்கு இந்தமுறை நிலைமை மாறும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.