Ricky Pointing: "கடுப்பு ஏத்தாதிங்க சார்!" பொறுமை இழந்த பாண்டிங், கங்குலி அம்பயர்களுடன் வாக்குவாதம் - என்ன நடந்தது?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் இம்பேக்ட் வீரரை களமிறக்கிய விவகாரத்தில் டெல்லி கேபிடல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தனது பொறுமை இழந்து அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டெல்லி அணி இயக்குநர் கங்குலியும் வாக்குவாதத்தில் ஈடுபட எல்லாம் விதிப்படி தான் நடந்துள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது
ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 185 ரன்கள் அடித்தது. அந்த அணியின் இளம் பேட்ஸ்மேன் ரியான் பராக் 84 ரன்கள் அடித்தார்.
இதைதத்தொடர்ந்து சேஸிங் செய்த டெல்லி 173 ரன்கள் எடுக்க, 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் டெல்லி கேபிடல்ஸ் தொடர்ச்சியாக இரண்டு தோல்வியை அடைந்துள்ளது.
இம்பேக்ட் வீரர் குழப்பம்
முன்னதாக, ராஜஸ்தான் அணி லெவனில் வெளிநாட்டு வீரர்களாக ஜோஸ் பட்லர், ஷிமரான் ஹெட்மேயர், ட்ரெண்ட் போல்ட் ஆகியோரின் பெயர்கள் மட்டும் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பிறகு பீல்டிங்குக்கு வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இம்பேக்ட் வீரராக ஹெட்மேயருக்கு பதிலாக நந்த்ரே பர்கர் களமிறங்கினார்.
ஆட்டம் தொடங்கிய 2வது பந்தில் பீல்டிங்கில் இருந்த இந்த வீரரான ஷுபம் துபேவை அனுப்பிவிட்டு, அயல்நாட்டு வீரரான ரோவ்மன் பவலை பீல்டிங் செய்ய அழைத்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன்.
பாண்டிங் வாக்குவாதம்
இதைக் கண்ட டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கைகளை காட்டி நான்காவது வீரர் களமிறக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். மூன்று அயல்நாட்டு வீரர்கள் மட்டும் ஆடும் லெவனில் இருக்கும்போது, நான்காவது வீரர் எப்படி உள்ளே நுழையலாம் என அம்யர்களிடம் முறையிட்டார். உடனடியாக டக்அவுட்டில் இருந்து ரிக்கி பாண்டிங் அருகில் சென்ற நான்காவது அம்பயர், இதுதொடர்பாக விளக்கம் அளித்தார்.
ஆனாலும் பொறுமையை இழந்த பாண்டிங் அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் டக்அவுட்டில் இருந்த டெல்லி கேபிடல்ஸ் இயக்குநர் கங்குலியும் வாக்குவாதம் செய்தார். இருப்பினும் இந்த வீரர்கள் மாற்றம் என விதிக்கு உட்பட்டு தான் இருப்பதாக அம்பயர் தெளிவாக அவர்களுக்கு விளக்கினார்.
இதன் பின்னர் பாண்டிங் இதை ஒப்புக்கொள்ளாமல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியவாறு இருந்தார்.
அயல்நாட்டு வீரர்கள் பற்றி ஐபிஎல் கூறும் விதிமுறைகள் என்ன?
அயல்நாட்டு வீரர்கள் விளையாடும் விதிகளில்,விதி எண் 1.2.5இன் படி, எந்தவொரு அணியும் தங்களது அணிகளில் நான்கு அயல்நாட்டு வீரர்களுக்கு மேல் சேர்க்க கூடாது.
அதேசமயம் விதி எண் 1.2.6இன் படி, ஒரு அணியில் நான்கு அயல்நாட்டு வீரர்கள் இடம்பிடித்தால், மற்றொரு அயல்நாட்டு வீரர் அணியின் இன்னொரு வீரருக்கான மாற்று வீரராக களமிறங்கலாம்.
அதாவது, "போட்டி தொடங்கும் முன் ஒரு அணியில் நான்கு அயல்நாட்டு வீரர்களுக்கு குறைவாக இருந்தால், அந்த அணியில் இன்னொரு அயல்நாட்டு வீரரை மாற்று வீரராக களமிறக்கலாம். அந்த அயல்நாட்டு வீரர் மற்றொரு அயல்நாட்டு அல்லது உள்நாட்டு வீரருக்கு பதிலாகவும் பீல்டிங் செய்யலாம்" என கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் போட்டியில் நடந்த இந்த விவகாரம், ஐபிஎல் 2024 சீசனில் சர்ச்சையாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.