தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Andrew Symonds Memorial Day: ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் போர் வீரன்! ஸ்லீப்பர் செல் ஆட்டக்காரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்

Andrew Symonds Memorial Day: ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் போர் வீரன்! ஸ்லீப்பர் செல் ஆட்டக்காரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 14, 2024 06:20 AM IST

எந்த சூழ்நிலையிலும் எதிரணிக்கு வாய்ப்பை தராமலும், விட்டுக்கொடுக்காமலும் இருக்கும் போர் வீரன் ஆக ஆஸ்திரேலியா அணிக்கு இருந்துள்ளார் சைமண்ட்ஸ். ஸ்லீப்பர் செல் போல் செயல்பட்டு எதிரணியிடம் இருந்து வெற்றியை பறிக்கும் ஆஸ்திரேலியாவின் வல்லவராக பல போட்டிகளில் செயல்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் போர் வீரன் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்
ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் போர் வீரன் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் களமிறங்கி இக்கட்டான சூழ்நிலையில் அணியை மீட்பதாகட்டும், அதேசமயம் பவுலிங்கிலும் தேவைப்படும் நேரத்தில் திருப்புமுனை தருவதாகட்டும், பீல்டிங் குறைந்தது 10 முதல் 15 ரன்கள் சேமித்து கொடுப்பதாகட்டும் ஆல்ரவுண்டர் என்ற சொல்லுக்கு ஒவ்வொரு போட்டியிலும் சரியான நியாயத்தை வெளிக்காட்டுபவராக இருந்துள்ளார்.

ஸ்லீப்பர் செல் பினிஷர்

கிரிக்கெட் விளையாட்டில் பினிஷர் என்றாலே தோனி என்று சின்ன குழந்தையும் சொல்லும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதே பினிஷராக 90களில் வலம் வந்த பல வெற்றிகளை சைலண்டாக தனது அணிக்கு பெற்று தந்தவர் மைக்கேல் பெவன் என்பதும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் பெவன் - தோனி ஆகியோருக்கு இடைப்பட்ட காலத்தில் அந்த பணியை ஸ்லீப்பர் செல் போல் செய்து ஆஸ்திரேலியா அணி இரண்டு முறை உலக கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்து மேட்ச் வின்னராக இருந்தவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்.

முதல் பேட்டிங்கோ, இரண்டாவது பேட்டிங்கோ அணிக்கு அந்த நேரத்தில் என்ன தேவையோ அதை பேட் மூலமாக அல்லது பவுலிங் மூலமாக கொடுப்பதில் முழு முயற்சியை வெளிப்படுத்தி கேப்டனின் வீரராக வலம் வந்துள்ளார். குறிப்பாக பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் நான் இருக்கிறேன், முடிந்தால் என்னை அவுட்டாக்குங்கள் என சொல்வது போல் பல இன்னிங்ஸை நங்கூரமிட்டு விளையாடியவர் சைமண்ட்ஸ். ஸ்லீப்பர் செல் போல் செயல்பட்டு எதிரணியிடம் இருந்து வெற்றியை பறிக்கும் ஆஸ்திரேலியாவின் வல்லவராக பல போட்டிகளில் செயல்பட்டுள்ளார்.

ரிக்கி பாண்டிங் அணியில் மிகவும் முக்கியமான வீரராக இருந்து வந்த சைமண்ட்ஸ், அவரது அணியில் ஆல்ரவுண்டர் இடத்தை சரியாக நிரப்பக்கூடியவராக இருந்துள்ளார்.

போர் வீரன் 

தனது பெற்றோருக்கு தத்து பிள்ளையான சைமண்ட்ஸ், கிரிக்கெட்டில் அறிமுகமான புதிதில் மொட்டை தலை, பின்னர் நீண்ட முடி, கடைசி கட்டத்தில் மீண்டும் மொட்டை தலை, பார்ப்பதற்கு கரடுமுரடான முகம், தூங்கி வழிவது போல் இருக்கும் கண்கள், ஆஜானுபவ உடல், மிக முக்கியமாக உதட்டில் க்ரீம் என சைமண்ட்ஸின் உடல் தோற்றமே ஒரு போர் வீரன் போல் இருக்கும்.

அதற்கு ஏற்றாற் போல் அவரது ஆட்டமும் எந்த நிலையிலும் எதிரணி வாய்ப்பை தராமல் நெருக்கடியை மட்டும் தரும் விதமாகவே இருக்கும். இவர் களத்தில் இருக்கும் வரை ஆட்டத்தில் எந்த மாதிரியான திருப்புமுனையையும் பார்க்கலாம்.

2008இல் இந்தியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ர சிபி சீரிஸ் தொடர் இரண்டாவது இறுதிப்போட்டியில் மைதானத்தில் உள்ள அத்துமீறி நிர்வாணமாக ரசிகர் ஒருவர் நுழைந்துள்ளார். அப்போது நான் ஸ்டிரைக்கராக இருந்த சைமண்ட்ஸ் தனது கை மூட்டு பகுதியால் அவரை தடுக்க, அந்த நபர் சுழன்று கீழே விழுவார். இந்த சம்பவம் அப்போது மிகவும் பிரபலமாகி இருந்தது.

இதேபோல் மைதானத்தில் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பல்வேறு ட்ரீட்மெண்ட்களை வழங்கியதில் பெயர் பெற்றவராக இருந்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் சைமண்ட்ஸ்

ஐபிஎல் முதல் சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார் சைமண்ட்ஸ். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சதமடித்த இவர் 53 பந்துகளில் 117 ரன்கள் அடித்து, முதல் சீசனில் சதமடித்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். இதன் பின்னர் 2011 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அந்த அணியில் ஒருவராக சைமண்ட்ஸ் அங்கம் வகித்தார்.

சர்ச்சை நாயகன் 

என்னதான் துடுக்கான விளையாட்டு வீரராக இருந்தாலும் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி சர்ச்சை நாயகனாகவும் சைமண்ட்ஸ் வலம் வந்துள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இவருக்கு வாய்ப்பே அளிக்காமல் வேறு வழியில்லாமல் ஓய்வு எடுக்கும் நிர்பந்தத்தில் தள்ளும் விதமாக தொடர் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

சிறப்பாக சென்ற சைமண்ட்ஸின் கிரிக்கெட் வாழ்க்கை பாண்டிங்குக்கு பிறகு வந்த மைக்கேல் கிளார்க்கிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, குடிபழக்கம் போன்றவற்றால் முடிவுக்கு வந்தது. சைமண்ட்ஸ் கிரிக்கெட் வாழ்க்கையில் மங்கிகேட் சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையாக இன்றளவும் பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியே போதிய ஆதரவு அவருக்கு தரவில்லை என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டி ஒன்றின்போது டீம் மீட்டிங்கில் பங்கேற்காமல் இருந்தார். அதற்கு மீன் பிடிக்க சென்றுவிட்டதாக தில்லாக விளக்கமும் அளித்தார். இதுவே அவரது கிரிக்கெட் கேரியரை முடிவுக்கு கொண்டு வர முக்கிய காரணமாக அமைந்தது. அவருக்கான மாற்று வீரரையும் அணி நிர்வாகம் பார்க்க தொடங்கியது.

சைமண்ட்ஸ் சாதனைகள்

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிலும் சேர்த்து 108 கேட்ச்களை பிடித்த, அதிக கேட்ச்கள் பிடித்த ஆஸ்திரேலியா வீரர்களில் ஒருவராக இருக்கிறார்

ஒரே தொடரில் 250 ரன்கள், 10 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இருந்துள்ளார்

ஒரு நாள் போட்டிகளில் இவர் இறந்த காலகட்டத்தில் 5 ஆயிரம் ரன்கள், 100 விக்கெட்டுகள் எடுத்த 22 வீரர்களில் ஒருவராக இருந்துள்ளார். அதிக கேட்ச் மற்றும் பவுலிங் விக்கெட்டுகளை எடுத்த வீரராக உள்ளார்.

கார் விபத்தில் மரணம்

குயிண்ஸ்லாந்தில் தனியாக காரில் சென்ற சைமண்ட்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் இறந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா ஜாம்பவான் வீரர் ஷேன் வார்னே மறைந்தார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் முக்கிய வீரர்களாக திகழ்ந்த வீரர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழ்த்தியது.

எந்த விளையாட்டிலும் ஒரு சிறந்த வீரரை போல், அவரை நினைவபடுத்தும் விதமாக இன்னொரு வீரர் பின்னாளில் உருவாவதும், அவர் ரசிகர்களால் கொண்டாடப்படுவதும் மாறாத விதியாக நடந்து வருகிறது. ஆனால் சைமண்ட்ஸ் விஷயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் நடக்காமல் இருக்கிறது என்றே கூறலாம். இன்று அவரது இரண்டாவது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point