சச்சினை காட்டிலும் கோலியின் காத்திருப்பு குறைவுதான்.. நிம்மதியுடன் இருப்பார் - சேவாக் சொன்ன விஷயம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  சச்சினை காட்டிலும் கோலியின் காத்திருப்பு குறைவுதான்.. நிம்மதியுடன் இருப்பார் - சேவாக் சொன்ன விஷயம்

சச்சினை காட்டிலும் கோலியின் காத்திருப்பு குறைவுதான்.. நிம்மதியுடன் இருப்பார் - சேவாக் சொன்ன விஷயம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 05, 2025 02:32 PM IST

ஐபிஎல் கோப்பைக்காக விராட் கோலி 18 ஆண்டுகள் காத்திருந்தது, சச்சின் டெண்டுல்கரின் 2011 உலகக் கோப்பை வெற்றியுடன் ஒப்பிட்டுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக்.

சச்சினை காட்டிலும் கோலியின் காத்திருப்பு குறைவுதான்.. நிம்மதியுடன் இருப்பார் - சேவாக் சொன்ன விஷயம்
சச்சினை காட்டிலும் கோலியின் காத்திருப்பு குறைவுதான்.. நிம்மதியுடன் இருப்பார் - சேவாக் சொன்ன விஷயம் (PTI)

இதையடுத்து ஆர்சிபி அணி இதற்கு முன்னர் மூன்று முறை இறுதிப் போட்டியில் விளையாடிய நிலையில் மூன்று முறையும் தோல்விகளைச் சந்தித்தது. இதைத்தொடர்ந்து ஒரு வழியாக கடந்த செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் நடந்த போட்டியில் கோப்பை வறட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது.

இறுதிப் போட்டியில் ஆர்சிபியின் இன்னிங்ஸில் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அந்த அணி சார்பாக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் இருந்தார். கோலியின் ஆட்டம் அதிரடியாக இல்லாவிட்டாலும், பொறுப்பான பேட்டிங் ஆர்சிபி அணியை 20 ஓவர்களில் 190/9 என்ற வலுவான ஸ்கோரை எட்ட உதவியது.

சச்சினை காட்டிலும் குறைவுதான்

ஆர்சிபி அணியின் வெற்றிக்குப் பிறகு, இந்திய அணியிலும், டெல்லியிலும் கோலியுடன் டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்ட முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்திர சேவாக், ஆர்சிபி நட்சத்திரத்தைப் பாராட்டினார். அதே நேரத்தில் சச்சின் டெண்டுல்கருடன் ஒரு சுவாரஸ்யமான ஒப்பீடையும் செய்தார். ஒரு கோப்பைக்காக கோலியின் காத்திருப்பு பற்றி சேவாக் கூறும்போது, ஒருநாள் உலகக் கோப்பைக்காக டெண்டுல்கர் காத்திருந்தது மிகவும் நீண்டது என்றும், இருப்பினும், அவர் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை என்றும் சேவாக் குறிப்பிட்டார்.

"கோலி கோப்பையை வெல்ல 18 ஆண்டுகள் மட்டுமே காத்திருந்தார். சச்சின் டெண்டுல்கர் 1989 முதல் 2011 வரை காத்திருந்தார். எனவே, கோலியின் காத்திருப்பு குறைவாக இருந்தது. ஆனாலும் சச்சின் நம்பிக்கையை இழக்கவில்லை. தனது கையில் ஒரு உலகக் கோப்பையுடன் செல்ல வேண்டும் என்பது உறுதியாக இருந்தார்" என்று சேவாக், கிரிக்பஸ் இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

கோப்பைகளை வெல்வது எளிதல்ல

கோலி தற்போது நிம்மதியைடந்திருப்பார் எனவும், எப்போது வேண்டுமானாலும் வருத்தப்படாமல் ஓய்வு பெற முடியும் என்று சேவாக் மேலும் கூறினார்.

"விராட் கோலி தற்போது நிம்மதியாக இருக்கலாம். அவர் எப்போது வேண்டுமானாலும் ஐபிஎல் விளையாடுவதை மகிழ்ச்சியுடன் நிறுத்தலாம். ஒரு வீரர் கோப்பையை வெல்ல விளையாடுகிறார். பணம் வரும், போகும், ஆனால் கோப்பைகளை வெல்வது எளிதல்ல. கோலியின் காத்திருப்பு முடிந்தாலும், அவர் ஐபிஎல் பயணத்தில் மிகவும் வலுவான பங்களிப்பைச் செய்துள்ளார்," என்று முன்னாள் தொடக்க வீரர் சேவாக் கூறினார்

கோலியின் ஐபிஎல் 2025 பயணம்

ஐபிஎல் 2025 சீசனை பொறுத்தவரை விராட் கோலி, 15 போட்டிகளில் 657 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனின் அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரராக உள்ளார். 144.71 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஸ்கோர் செய்த அவர், சராசரியாக 54.75 ரன்களை எடுத்தார். இந்த சீசனில் எட்டு அரை சதங்களை விளாசி இருக்கும் கோலி, 19 சிக்ஸர்கள் மற்றும் 66 பவுண்டரிகள் அடித்துள்ளார். பீல்டிங்கில் 3 கேட்ச்களை பிடித்துள்ளார்.