பெங்களுரு கூட்ட நெரிசல்.. சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மனம் உடைந்து போய்யுள்ளேன்! விராட் கோலி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  பெங்களுரு கூட்ட நெரிசல்.. சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மனம் உடைந்து போய்யுள்ளேன்! விராட் கோலி

பெங்களுரு கூட்ட நெரிசல்.. சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மனம் உடைந்து போய்யுள்ளேன்! விராட் கோலி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 05, 2025 12:24 PM IST

ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, சின்னசாமி மைதானத்துக்கு வெளியே நடந்திருக்கும் விஷயங்களை கேள்விப்பட்டதுடன் மனம் உடைந்து போனதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

பெங்களுரு கூட்ட நெரிசல்.. சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மனம் உடைந்து போய்யுள்ளேன்! விராட் கோலி
பெங்களுரு கூட்ட நெரிசல்.. சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மனம் உடைந்து போய்யுள்ளேன்! விராட் கோலி (PTI)

மனவேதனை அடைந்தேன்

ஆர்சிபி ரசிகர்களுக்கு சிறப்பு மிக்கதாக இருக்க வேண்டிய இந்த நாள், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் தவறிவிட்ட நிலையில் துயரமான நாளாக மாறியது. கூட்ட நெரிசல் குறித்து ஆர்சிபியின் அதிகாரப்பூர்வ அறிக்கையை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த விராட் கோலி மனவேதனை அடைந்திருப்பதாக கூறியுள்ளார்.

பெங்களூருவில் ஆர்சிபியின் உள்ளூர் மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, வெற்றி கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன. சின்னசாமி ஸ்டேடியத்துக்குள் நிரம்பியிருந்த கூட்டத்துக்கு முன்னால் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதரும், கோலியும் மட்டுமே வெற்றி கோப்பையை வெளிப்படுத்துவதற்கு முன்பு உரை நிகழ்த்தினார்கள்.

"சொல்ல வார்த்தைகளே தெரியவில்லை. முற்றிலும் மனவேதனை அடைந்தேன்" என்று விராட் கோலி இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது பிரார்த்தனைகள்

விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும், ஆர்சிபியின் அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், அவர் இதயத்தை உடைக்கும் எமோஜிகளைப் பயன்படுத்தியுள்ளார்.

சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுடன் தனது பிரார்த்தனைகளைப் பகிர்ந்து கொள்வதாக ஆர்சிபி முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். " சின்னசாமி மைதானத்தில் நடந்த துயர சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.

ஆர்சிபி கொண்டாட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க ஆர்சிபி அணி விதான சவுதாவுக்கு வருகை தந்ததிலிருந்து அவர்களின் கொண்டாட்டம் தொடங்கியது. வீரர்கள் சின்னசாமி மைதானத்துக்கு செல்வதற்கு முன்பு கர்நாடக முதல்வர் ஐபிஎல் 2025 சாம்பியன்களை வாழ்த்தினார்.

இருப்பினும், அவர்கள் அந்த இடத்துக்கு வருவதற்கு முன்பே, கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக செய்தி பரவியது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டன, இறுதியில் இறப்பு எண்ணிக்கை 10க்கும் அதிகமாக உயர்ந்தது. சம்பவம் குறித்த செய்திகள் வெளியான நிலையிலும், மைதானத்துக்குள் கொண்டாட்டங்கள் தொடர்ந்தன.

கோலி, ஆர்சிபி அணி கேப்டன் பட்டீதார் ஆகியோர் குறுகிய உரைகளை நிகழ்த்தினர். பின்னர் முழு ஆர்சிபி அணியும் சின்னசாமி மைதானத்தில் ரசிகர்களின் முன்னால் ஐபிஎல் கோப்பையை உயர்த்தி காட்டினர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்கு பிறகு, புதன்கிழமை மாலை பெங்களூரில் என்ன நடந்தது என்பது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி, ஆர்சிபி அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

"புதன்கிழமை பிற்பகல் அணியின் வருகையை எதிர்பார்த்து பெங்களூரு முழுவதும் பொதுமக்கள் கூடியது தொடர்பாக ஊடக அறிக்கைகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். அனைவரின் பாதுகாப்பும் நல்வாழ்வும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது" என்று அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

"இந்த துயரமான உயிர் இழப்புக்கு ஆர்சிபி இரங்கல் தெரிவிக்கிறது மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. நிலைமை குறித்து உடனடியாக அறிந்தவுடன், நாங்கள் எங்கள் திட்டத்தை உடனடியாக திருத்தி, உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையை பின்பற்றினோம். எங்கள் அனைத்து ஆதரவாளர்களையும் தயவுசெய்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி ஐபிஎல் 2025 பட்டத்தை வென்றது. சமீபத்திய டி20 போட்டியில் 600 ரன்களுக்கு மேல் அடித்ததன் மூலம் ஆர்சிபி அணிக்காக கோலி ஒரு சிறப்பானதொரு இன்னிங்ஸை வெளிப்படுத்தினார்.