Kane Williamson: நியூசிலாந்து அணிக்கு ஐசிசி கோப்பை வென்று கொடுத்தவர்! கேப்டன்சியில் இருந்து விலகல் - மற்றொரு ஷாக்
டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் லீக் சுற்றிலேயே நியூசிலாந்து அணி வெளியேறிய நிலையில் கேப்டன்சியிலிருந்து விலகினார் கேன் வில்லியம்சன். நியூசிலாந்து அணிக்காக ஐசிசி கோப்பை வென்று கொடுத்த கேப்டனான இவர், மத்திய ஒப்பந்தத்தில் இருந்தும் விலகுவதாக தெரிவித்திருப்பது மற்றொரு ஷாக் ஆக அமைந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் லீக் சுற்றிலேயே நியூசிலாந்து அணி வெளியேறியுள்ளது. டாப் அணியாக நியூசிலாந்து வெளியேறியிருப்பது துர்தஷ்டமான விஷயமாக அமைந்திருக்கும் நிலையில், அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கேப்டன்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐசிசி கோப்பை வென்ற கேப்டன்
நியூசிலாந்து அணியை டெஸ்ட், ஒரு நாள், டி20 ஆகிய மூன்று வகை கிரிக்கெட்டிலும் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற கேப்டன் வில்லியம்சன். அதன்படி 2023இல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2019 ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி, 2021 டி20 உலகக் கோப்பை ஆகிய தொடர்களில் நியூசிலாந்து இறுதிப்போட்டியில் விளையாடியது.
இதில் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வென்று, தற்போது நடப்பு சாம்பியனாக உள்ளது. 2000ஆவது ஐசிசி நாக்அவுட் கோப்பை தொடருக்கு பின்னர் நியூசிலாந்து அணி வென்றிருக்கும் இரண்டாவது ஐசிசி கோப்பையாக இது அமைந்துள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு ஐசிசி கோப்பை வென்று கொடுத்த கேப்டனாக இருக்கும் வில்லியம்சன் தற்போது வெள்ளை பந்து கிரிக்கெட் கேப்டன்சியில் இருந்து விலகியுள்ளார்.
மத்திய காண்ட்ராக்டில் இருந்து விலகல்
கேப்டன்சி மட்டுமல்லாமல், நியூசிலாந்து அணியின் 2024/25 சீசன் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். ஜனவரி மாதத்துக்கு பின்னர் அவர் நியூசிலாந்துக்கு வெளியே ஒப்பந்தத்தை எடுக்க தேர்வு செய்துள்ளாராம். எனவே அவர் உள்நாட்டு சுற்றுப்பயண போட்டிகளில் ஒரு பகுதி இருக்க மாட்டார் என தெரிகிறது.
வில்லயம்சன் கேப்டன்சியில் நியூசிலாந்து
நியூசிலாந்து அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக வில்லியம்சன் இருந்து வருகிறார். இவரது கேப்டன்சியில் 2019 முதல் 2021 வரை நியூசிலாந்து அணியின் பொற்காலமாக இருந்துள்ளது. 2019 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து எதிரான இறுதிப்போட்டி சமனில் முடிவடைந்து, சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால் பவுண்டரி எண்ணிக்கை மூலம் கோப்பையை நழுவவிட்டு இரண்டாவது இடத்தை பிடித்தது.
இதைத்தொடர்ந்து 2021 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை தழுவி கோப்பையை பறிகொடுத்தது. இருப்பினும் மற்ற அணிகளுக்கு சிம்மாசனமாக நியூசிலாந்து அணி இருந்தது. பல உள்நாட்டு வீரர்களுக்கு கேன் வில்லியம்சன் சிறந்த முன் மாதிரியாக திகழ்ந்துள்ளார்.
கடைசியாக நடைபெற்ற மூன்று டி20 உலகக் கோப்பை தொடர்களிலும் நியூசிலாந்து அணி அரையிறுதி போட்டியை விளையாடிய அணியாக உள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் வெளியேற்றம்
நடந்து வரும் டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் நியூசிலாந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததது. ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியை தழுவி அடுத்து சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
பிரான்சைஸ் லீக் கிரிக்கெட் காரணமாக பல முன்னணி வீரர்கள் நியூசிலாந்து மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகியதால், இளம் வீரர்களை அணிக்கு தேர்வு செய்யும் நிர்பந்தம் வாரியத்துக்கு ஏற்பட்டது. இருப்பினும் மிக பெரிய தொடரான டி20 உலகக் கோப்பை தொடருக்கு சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பியபோதிலும் ஒர்க் அவுட் ஆகாமல் போயுள்ளது.
அதிக டி20 போட்டிகளில் கேப்டன்சி
டி20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானின் பாபர் அசாம், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவராக கேன் வில்லியம்சன் உள்ளார். இவர் 75 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு, 39 வெற்றிகளுடன், 52 சதவீதம் வெற்றி சதவீதத்தை பெற்றுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சியில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன், தற்போது வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்