Jos Buttler: “இதெல்லாம் ரொம்ப தப்புங்க..” கன்குஷன் மாற்றம் ஏற்றுக்கொள்வதாக இல்லை - பட்லர் நக்கல்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Jos Buttler: “இதெல்லாம் ரொம்ப தப்புங்க..” கன்குஷன் மாற்றம் ஏற்றுக்கொள்வதாக இல்லை - பட்லர் நக்கல்

Jos Buttler: “இதெல்லாம் ரொம்ப தப்புங்க..” கன்குஷன் மாற்றம் ஏற்றுக்கொள்வதாக இல்லை - பட்லர் நக்கல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 01, 2025 02:58 PM IST

Jos Buttler on Concussion Sub: ஷிவம் துபேவுக்கு கன்குஷன் மாற்று வீரராக ஹர்ஷித் ராணா வந்ததை ஏற்றுக்கொள்ள வில்லை என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெளிவாக கூறியுள்ளார். போட்டி நடுவர்தான் இந்த முடிவை எடுத்தார் என் சொன்னதால், அதற்கு மேல் செல்வதற்கு ஒன்றும் இல்லை எனவும் கூறினார்.

கன்குஷன் மாற்றம் ஏற்றுக்கொள்வதாக இல்லை - பட்லர் நக்கல்
கன்குஷன் மாற்றம் ஏற்றுக்கொள்வதாக இல்லை - பட்லர் நக்கல் (AFP)

இந்த போட்டியில் இந்திய இன்னிங்ஸில் அதிரடியாக பேட் செய்த ஷிவம் துபே, மூளையதிர்ச்சி காரணமாக பீல்டிங் செய்யவில்லை. அவருக்கு மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டார். பவுலரான அவர் நல்ல தாக்கதத்தை ஏற்படுத்தியதோடு, 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

கன்குஷன் வீரர் சர்ச்சை

துபேவுக்கு மாற்று வீரராக ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. போட்டி முடிவுக்கு பின் முன்னாள் வீரர்களான கெவின் பீட்டர்சன், மைக்கேல் வாகன் உள்பட பலரும் இந்த கன்குஷன் மாற்று வீரர் விஷயத்தில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

போட்டிக்கு பின்னர் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லரும், கன்குஷன் மாற்று வீரர் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார்.

இதுபற்றி கருத்து தெரிவித்தள்ள ஜோஸ் பட்லர், "கன்குஷன் மாற்று வீரர் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. வெளியேறிய வீரருக்கு ஒத்த வீரர் மாற்றப்படவில்லை.

வேண்டுமானால் ஷிவம் துபே 25 மைல் வேகத்தில் பந்து வீசினார் அல்லது ஹர்ஷித் ராணா தனது பேட்டிங்கில் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளார் என்று நினைத்துக் கொள்கிறேன்" என நக்கலாக கூறினார்.

கன்குஷன் மாற்று வீரருக்கு எதிர்ப்பு தெரிவித்தேன்

"கன்குஷன் மாற்று வீரர் தொடர்பாக எந்த ஆலோசனையும் எங்களிடம் மேற்கொள்ளவில்லை. நான் பேட்டிங் செய்ய வந்தபோது யோசித்துக் கொண்டிருந்த விஷயம் இதுதான். ஹர்ஷித் யாருக்கு பதிலாக வந்துள்ளார் என்பது தான்.

துபேவுக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டதால் அவருக்கான மாற்று வீரர் என்று சொன்னார்கள், அதை நான் வெளிப்படையாகவே ஏற்கவில்லை. இது சரியான மாற்று அல்ல. போட்டி நடுவர்தான் இந்த முடிவை எடுத்தார் என்று சொன்னார்கள். அதை பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை" என்று கூறியுள்ளார்.

கன்குஷன் சப் பற்றி எம்சிசி கூறும் விதிமுறை என்ன?

கன்குஷன் மாற்று வீரர்களுக்கான ஐசிசி விளையாட்டு நிபந்தனைகளின் 1.2.7.3 இன் படி, "மாற்று வீரர் மாற்றப்படும் வீரருக்கு ஒத்த வீரராக இருந்தால், அவரை சேர்ப்பதால் போட்டியின் எஞ்சிய நேரத்தில் தனது அணிக்கு பெரிய தாக்கம் ஏற்படாது என்றால், ஐசிசி போட்டி நடுவர் கன்குஷன் மாற்று கோரிக்கைக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், ஐசிசி விதி 1.2.7.7இன் படி "எந்தவொரு கன்குஷன் மாற்று கோரிக்கை தொடர்பாகவும் ஐசிசி போட்டி நடுவரின் முடிவே இறுதியானது. இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய எந்த அணிக்கும் உரிமை இல்லை" என்று கூறுகிறது.

துபேவுக்கு என்ன நடந்தது

முன்னதாக, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக பேட் செய்த ஷிவம் துபே 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் 19.5 ஓவரின் போது இங்கிலாந்து பவுலர் ஜேமி ஓவர்டன் வீசிய பந்து துபே ஹெல்மெட் மீது தாக்கியது. இதனால் கன்குஷன் விதிமுறை பின்பற்ற வேண்டிய சூழல் உருவானது.

ராணா ஏற்படுத்திய தாக்கம்

இங்கிலாந்து சேஸிங்கில் களமிறங்கிபோது துபேவுக்கு மாற்று வீரராக ஹர்ஷித் ராணா கன்குஷன் மாற்ற வீரராக களமிறங்கினார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ராணா, டி20 போட்டியில் முதல் முறையாக விளையாடினார். சிறப்பாக பவுலிங் செய்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுத்த ராணா 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து லிவிங்ஸ்டன், பெத்தேல், ஜேமி ஓவர்டன் என 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து தாக்கம் ஏற்படுத்தினார்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.