42 ரன்களில் பார்சல்..120 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த வரலாறு! டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைவான ஸ்கோர் - இலங்கை மோசமான சாதனை
'டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைவான ஸ்கோர் என்ற மோசமான சாதனையை புரிந்துள்ளது இலங்கை அணி. தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 42 ரன்களில் ஆல்அவுட்டாகி நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் குறைவான ஸ்கோரை பதிவு செய்துள்ளது
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் செய்திருக்கும் இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது.
கடந்த 27ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பரிக்கா முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு சுருண்டது.
42 ரன்களில் ஆல்அவுட்
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள், தென் ஆப்பரிக்கா பவுலர்களின் துல்லிய பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழக்க, இலங்கை 13.5 ஓவரில் 42 ரன்களில் ஆல்அவுட்டாகியது. முழுவதுமாக ஒரு செஷன் கூட பேட்டிங் செய்யவிடாத அளவில் தென் ஆப்பரிக்கா பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தியது
அத்துடன் அந்த அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மார்கோ ஜான்சன் வெறும் 13 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளும், ககிசோ ரபாடா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
இலங்கை அணியில் இரண்டே பேட்ஸ்மேன்கள் மட்டும் இரட்டை இலக்கத்தில் ரன்கள் அடித்தனர். ஐந்து பேட்ஸ்மேன்கள் ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் குறைவான ஸ்கோர்
இலங்கை முதல் இன்னிங்ஸில் 42 ரன்களுக்கு ஆல்அவுட்டானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒரு அணி எடுத்திருக்கும் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது. இந்த லிஸ்டில் முதல் மற்றும் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
2021 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில், பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 36 ரன்களில் ஆல்அவுட்டானது. அதேபோல் சமீபத்தில் இந்தியா சுற்றுப்பயணம் வந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியது.
வரலாறு படைத்த ஜான்சன்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7க்கும் குறைவான ஓவர்கள் வீசி 7 விக்கெட்டை கைப்பற்றிய பவுலர் என்ற வரலாறு படைத்துள்ளார் தென் ஆப்பரிக்காவின் மார்கோ ஜான்சன். 6.5 ஓவர்கள், ஒரு மெய்டன், 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த சாதனையை ஆஸ்திரேலியாவின் ஹக் ட்ரம்பிள் 1904ஆம் ஆண்டில் நிகழ்த்தியுள்ளார். இதையடுத்து 120 ஆண்டுகளுக்கு கழித்து மீண்டும் இந்த சாதனை நிகழ்த்தி வரலாறு படைத்துள்ளார் ஜான்சன்.
இலங்கை அணியின் குறைவான ஸ்கோர்
தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக 42 ரன்களில் ஆல்அவுட்டாகியிருக்கும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி மிகவும் குறைவான ஸ்கோராக இது அமைந்துள்ளது.
அந்த அணி குறைவான ஸ்கோர் எடுத்திருக்கும் இன்னிங்ஸ் பின்வருமாறு
- 42 vs தென்னாப்பிரிக்கா, 2024
- 71 vs பாகிஸ்தான், 1994
- 73 எதிராக பாகிஸ்தான், 2006
- 81 எதிராக இங்கிலாந்து, 2001
- 82 எதிராக இந்தியா, 1990
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பரிக்கா வெற்றி பெறும் பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பைனலில் முன்னேறுவதற்கான வாய்ப்பு அந்த அணிக்கு பிரகாசமாகியுள்ளது.
தற்போதையே நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இருக்கின்றன. மூன்றாவது இடத்தில் இலங்கை அணியும், தென் ஆப்பரிக்கா அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
டாபிக்ஸ்