ஐபிஎல் 2025: பாட்டு, நடனம்.. கலைநிகழ்ச்சிகளுடன் கலக்கலாக தொடங்கியது ஐபிஎல் திருவிழா!-டாஸ் ரிப்போர்ட் இதோ
ஐபிஎல் 2025: ஐபிஎல் 2025 தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2025 சீசன் இன்று கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. கொல்கத்தாவில் மழை பெய்த காரணத்தால் மேட்ச் தொடங்குமா தொடங்காதா என சந்தேகம் நீடித்த நிலையில், ரசிகர்கள் சந்தோஷம் அடையும் வகையில் மழை நின்றது. இதையடுத்து, திட்டமிட்டபடி இன்று மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. முதலில் ஷாருக் கான் வந்து பேசினார். அதைத் தொடர்ந்து பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பாடல்களைப் பாடினார். இதனால், ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
அதைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை திஷா பதானி தலைமையிலான நடனக் குழுவினர் சில பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடினர். இந்திய ராப்பர் மற்றும் பாடகர் கரன் ஆஜ்லா பாடினார். பின்னர், ஷாருக் கான், கோலியை அழைத்து கவுரப்படுத்தினார். கோலிக்கு இது 18வது ஐபிஎல் ஆகும். அவர் ஒரே அணிக்காக ஆர்சிபி அணிக்காக 18 சீசன்களிலும் விளையாடியவர். இதற்காக அவரை அழைத்து வாழ்த்தினார் ஷாருக் கான். அவருடன் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்கையும் அழைத்து தலைமுறை இடைவெளி குறித்து பேசினார். பின்னர், 18வது ஐபிஎல் கிரிக்கெட்டை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது ரசிகர்கள் உள்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸில் ஜெயித்த ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணி பேட்டிங் செய்யவுள்ளது.