ஐபிஎல் 2025: இது எங்க ஏரியா.. பில்லா போல் கம்பேக் கொடுத்த சன் ரைசர்ஸ்.. சாதனை சதமடித்த அபிஷேக்! பஞ்சாப் தோல்வி
ஐபிஎல் 2025: முதல் போட்டி தவிர அடுத்த நான்கு போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பி வந்தனர் சன்ரைசர்ஸ் ஓபனர்களான ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் ஷர்மா. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிரடி வேட்டை நடத்தி கம்பேக் கொடுத்துள்ளனர்
ஐபிஎல் 2025 தொடரில் 27வது போட்டி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் சன் ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி, நான்கு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. பஞ்சாப் கிங்ஸ் 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் ஆறாவது இடத்தில் இருந்தது.
சன் ரைசர்ஸ் அணி தனது முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. பஞ்சாப் கிங்ஸ் அணி சிஎஸ்கேவுக்கு எதிராக 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சன் ரைசர்ஸ் தோல்வியில் இருந்து மீளும் விதமாகவும், பஞ்சாப் கிங்ஸ் தனது வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பிலும் இந்த போட்டியில் களமிறங்கியது.
பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், சன் ரைசர்ஸ் அணியில் கமிந்து மென்டிஸ்க்கு பதிலாக இஷான் மலிங்கா அறிமுக வீரராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 245 ரன்கள் குவித்த நிலையில், இதை சேஸ் செய்த சன் ரைசர்ஸ் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.
சன் ரைசர்ஸ் சேஸிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து இந்த இமாலய இலக்கை சேஸ் செய்த சன் ரைசர்ஸ் 18.3 ஓவரில் 2 விக்கெட் 247 இழப்புக்கு ரன்கள் எடுத்தது. 9 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 141, ட்ராவிஸ் ஹெட் 66 ரன்கள் எடுத்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் பவுலர்களில் அர்ஷ்தீப் சிங், யஸ்வேந்திரா சஹால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் மொத்தம் 8 பவுலர்கள் பந்து வீசினர்.
ஹெட் - அபிஷேக் ஷர்மா மிரட்டல் அடி
கடந்த 2024 சீசனில் தெறிக்கவிடும் ஜோடியாக ஒபனிங் ஜோடியாக சன் ரைசர்ஸ் ஓபனர்கள் ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் ஷர்மா முதல் போட்டி தவிர அடுத்தடுத்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து தற்போது மீண்டும் வெறித்தனமான கம்பேக் கொடுத்துள்ளனர்.
தங்களது வழக்கமான பாணி அதிரடியை கையிலெடுத்த இந்த ஜோடி பஞ்சாப் பவுலர்களின் பந்து வீச்சை உள்ளூர் மைதானமான ஹைதராபாத்தில் வைத்து நாலாபுறமும் சிதறவிட்டனர். இவர்களின் அதிரடியால் சன் ரைசர்ஸ் பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்தது.
முதல் விக்கெட்டுக்கு ஹெட் - அபிஷேக் ஷர்மா ஜோடி 171 ரன்கள் சேர்த்தது. 31 பந்துகளில் அரைசதமடித்த ட்ராவிஸ் ஹெட் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் அடித்து 66 ரன்கள் எடுத்து ஸ்பின்னர் சஹால் பந்தில் வீழ்ந்தார்.
இதற்கிடை அபிஷேக் ஷர்மா தனிக்காட்டு ராஜாவாக அதிரடியில் மிரட்டிய நிலையில், 19 பந்துகளில் அரைசதமடித்த நிலையில், 40 பந்துகளில் சதத்தை எட்டினார். தனது இன்னிங்ஸில் 14 பவுண்டரி, 10 சிக்ஸர்களை பறக்கவிட்டார். 55 பந்துகளில் 141 ரன்கள் அடித்து அர்ஷ்தீப் பந்தில் வீழ்ந்தார். அதிவேக சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனை புரிந்தார் அபிஷேக் ஷர்மா.
எடுபடாத பஞ்சாப் கிங்ஸ் பவுலிங்
ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்தே அதிரடியை ஆரம்பித்தனர் சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள். பஞ்சாப் கிங்ஸ் பவுலர்களை ஒருத்தரை விடாமல் பவுண்டரி, சிக்ஸர்கள் என அட்டாக் செய்தனர். பஞ்சாப் கிங்ஸ் ஸ்டிரைக் பவுலரான பெர்குசன் 2 பந்துகள் மட்டும் வீசிய நிலையில், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார்.
பஞ்சாப் அணியில் மொத்தம் 8 பவுலர்கள் இந்த போட்டியில் பந்து வீசினர். ஸ்பின்னரான சஹால் 4 ஓவரில் 56 ரன்களை வாரி வழங்கினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்துக்கு முன்னேறியது. பஞ்சாப் கிங்ஸ் இந்த தோல்வியால் ஆறாவது இடத்துக்கு கீழே இறங்கியது.
