ஐபிஎல் 2025: ஷமி மிக மோசமான சாதனை.. பவுலர்களை புரட்டி எடுத்த பஞ்சாப் கிங்ஸ்.. சன் ரைசர்ஸ் அணிக்கு கடினமான இலக்கு
ஐபிஎல் 2025: வேகப்பந்து வீச்சாளர் ஷிமி 4 ஓவர்களில் 75 ரன்களை விட்டுக்கொட்டு ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது மோசமான பவுலிங் ஸ்பெல்லை வீசியுள்ளார். சன் ரைசர்ஸ் பவுலர்களை புரட்டி எடுத்த பஞ்சாப் கிங்ஸ் 245 ரன்கள் குவித்துள்ளனர்.
ஐபிஎல் 2025 தொடரில் 27வது போட்டி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் சன் ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி, நான்கு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
சன் ரைசர்ஸ் அணி தனது முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. பஞ்சாப் கிங்ஸ் அணி சிஎஸ்கேவுக்கு எதிராக 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சன் ரைசர்ஸ் தோல்வியில் இருந்து மீளும் விதமாகவும், பஞ்சாப் கிங்ஸ் தனது வெற்றியை பயணத்தை தொடரும் முனைப்பிலும் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளது.
பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், சன் ரைசர்ஸ் அணியில் கமிந்து மென்டிஸ்க்கு பதிலாக இஷான் மலிங்கா அறிமுக வீரராக களமிறக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.
அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 82, பிரப்சிம்ரன் சிங் 42, பிரியான்ஷ் ஆர்யா 36, ஸ்டோய்னிஸ் ரன்கள் அடித்தனர். சன் ரைசர்ஸ் பவுலர்களில் ஹர்ஷல் படேல் 4, அறிமுக வீரர் இஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதிரடி தொடக்கம்
பஞ்சாப் கிங்ஸ் ஓபனர்களான பிரியான்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் ஜோடி ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 4 ஓவரில் 66 ரன்கள் குவித்தனர். கடந்த போட்டியில் சதமடித்த பிரியான்ஷ் ஆர்யா, 13 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். தனது இன்னிங்ஸில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை அடித்த நிலையில் ஹர்ஷல் பட்டேல் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
மற்றொரு ஓபனரான பிரப்சிம்ரன் சிங்கும் அதிரடியில் மிரட்டிய நிலையில் 23 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார். பஞ்சாப் கிங்ஸ் பவர்ப்ளே ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 89 ரன்களை எடுத்தது.
ஷ்ரயோஸ் அதிவேக அரைசதம்
இவர்களுக்கு அடுத்தபடியாக ஷ்ரேயாஸ் ஐயரும் தன் பங்குக்கு வானவேடிக்கை காட்டினார். சன் ரைசர்ஸ் பவுலர்களுக்கு எதிராக அடுத்தடுத்து சிக்ஸர்கள், பவுண்டரிகளை அடித்த ஷ்ரேயாஸ் 22 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிவேக அரைசதமடித்தார். 6 பவுண்டரி, 6 சிக்ஸர் அடித்து 36 பந்துகளில் 82 ரன்கள் அடித்த ஷ்ரேயாஸ், ஹர்ஷல் படேல் ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
மிடில் ஆர்டரில் பேட் செய்த நேகல் வதிரா விரைவாக 27 ரன்கள் அடித்த நிலையில், ஷஷாங்க் சிங் 2, கிளன் மேக்ஸ்வெல் 3 என அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றினர். கடைசி கட்ட ஓவர்களில் 4 சிக்ஸர்கள் பறக்க விட்ட ஸ்டோய்னிஸ் 11 பந்துகளில் 34 ரன்கள் அடித்து நல்ல பினிஷிங் கொடுத்தார்.
ஷிமி மோசமான பவுலிங்
வேகப்பந்து வீச்சாளரான ஷமி தனது கேரியரில் மிகவும் மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தியுள்ளார். 4 ஓவர்களில் 75 ரன்கள் வாரி வழங்கிய ஷமி, 6 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்தார். இது ஐபிஎல் வரவாற்றில் இரண்டாவது மோசமான ஸ்பெல்லாக அமைந்துள்ளது.
சன் ரைசர்ஸ் பவுலர்கள் அனைவரும் 4 ஓவர்களில் 40 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தனர். கேப்டன் கம்மின்ஸ் 4 ஓவரில் 40 ரன்கள் விட்டுக்கொடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் முதல் 10 ஓவரில் 120 ரன்களும், அடுத்த 10 ஓவரில் 125 ரன்களும் குவித்துள்ளனர்.
