ஐபிஎல் 2025: சன் ரைசர்ஸ்க்கு எதிராக இரண்டு போட்டியிலும் வெற்றி.. சட்டென டாப் 4 இடத்துக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்
சன் ரைசர்ஸ்க்கு எதிராக இரண்டு போட்டியிலும் ஆதிக்கம் செலுத்திய மும்பை இந்தியன்ஸ் வெற்றியும் பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்துக்கு முன்னேறியுள்ளது. அத்துடன் ப்ளேஆஃப் சுற்றுக்கான போட்டியாளர்கள் லிஸ்டிலும் இணைந்துள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 41வது போட்டி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் சன் ரைசர்ஸ் 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலும் இருந்தது.
சன் ரைசர்ஸ் தனது முந்தைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து மீண்டும் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்ட நிலையில், பழிதீர்க்கும் முனைப்பில் களமிறங்கியது.
இதுவரை 2 வெற்றிகளை மட்டும் பெற்றிருந்த சன் ரைசர்ஸ் அணிக்கு கட்டாய வெற்றியை பெற்றாக வேண்டிய போட்டியாக அமைந்திருந்தது. சன் ரைசர்ஸ் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் சேர்க்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஸ்பின்னரான விக்னேஷ் புதூர் களமிறக்கப்பட்டார்
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 143 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோரை 15.4 ஓவரில் சேஸ் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் சேஸிங்
முன்னதாக, டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின்னர் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்த எளிய இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் 15.4 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து, 26 பந்துகள் எஞ்சியிருக்க, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 70, சூர்யகுமார் யாதவ் 40 ரன்கள் அடித்தனர். சன் ரைசர்ஸ் பவுலர்களில் உனத்கட், இஷான் மலிங்கா, ஜீசன் அன்சார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்ட எடுத்தனர்.
ரோஹித் ஷர்மா அரைசதம்
இந்த சீசனில் இம்பேக் வீரராக களமிறக்கப்பட்ட ரோஹித் ஷர்மா,பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வந்தார். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் முந்தைய போட்டியான சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் பார்மை மீட்டெடுத்தார்.
இதையடுத்து சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தனது பார்மை தொடர்ந்த ரோஹித் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஓபனரான ரிக்கெல்டன் 11 ரன்களில் நடையை கட்ட, ரோஹித் ஷர்மா தனது கிளாஸிக் ஷாட்கள் மூலம் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
பவர்ப்ளே ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பேட் செய்த ரோஹித் ஷர்மா 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். ரோஹித்துடன் இணைந்து நன்றாக பேட் செய்து வந்த வில் ஜாக்ஸ் 22 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டானார்.
சூர்யாகுமார் அதிரடி
பேட்டிங்கில் மும்பை அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில்களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தன் பங்குக்கு அதிரடி காட்டினார். மைதாத்தின் அனைத்து திசைகளிலும் பவுண்டரிகள் அடித்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் இலக்கை விரைவாக எட்டியது.
வெற்றிக்கு தேவை 14 ரன்கள் என இருந்தபோது சிறப்பாக பேட் செய்த ரோஹித் ஷர்மா, இஷான் மலிங்கா வீசிய அற்புதமான யார்க்கரில் சிக்கி அவுட்டானார். 46 பந்துகளில் 70 ரன்கள் அடித்த ரோஹித் ஷர்மா தனது இன்னிங்ஸில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர் அடித்தார்.
கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த சூர்யகுமார் யாதவ், 19 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார். இந்த வெற்றிக்கு பிறகு புள்ளிப்பட்டியில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆறாவது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் சட்டென முன்னேறி மூன்றாவது இடத்துக்கு சென்றது. இந்த சீசனில் முதல் முறையாக டாப் 4 இடத்துக்கு முன்னேறியுள்ளது மும்பை இந்தியன்ஸ்.
