ஐபிஎல் 2025: வேகத்தில் மிரட்டிய சிராஜ்.. பேட்டிங்கில் தடுமாறிய சன் ரைசர்ஸ்! குஜராத்துக்கு எளிய இலக்கு
ஐபிஎல் 2025: வழக்கமாக பேட்டிங்குக்கு நன்கு ஒத்துழைக்கும் ஹைதாராபாத் ஆடுகளும் இந்த போட்டியில் நேர்மாறாக பவுலர்களுக்கு நன்கு உதவியது. குஜராத் பவுலர்களின் மிரட்டல் பவுலிங்கை சமாளிக்க முடியாக சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் திணறினர். அற்புதமாக பவுலிங் செய்த முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஐபிஎல் 2025 தொடரின் 19வது போட்டி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 4 போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தனது முந்தைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு எதிராக 80 ரன்கள் வித்தியாசத்தில் மிக பெரிய தோல்வியை தழுவியது. குஜராத் டைட்டன்ஸ் முந்தைய போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் குஜராத் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். சன் ரைசர்ஸ் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் சேர்க்கப்பட்டார்.
குஜராத் பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 31, கிளாசன் 27, கம்மின்ஸ் 22 ரன்கள் அடித்தனர்.
குஜராத் பவுலர்களில் முகமது சிராஜ் 4, விக்கெட்டுகள், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மோசமான பேட்டிங்
வழக்கமாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்து வரும் ஹைதராாத் ஆடுகளம், பவுலர்களுக்கு நன்கு உதவும் விதமாக இருந்தது. இதனால் குஜராத் பவுலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க திணறினர். அதிரடிக்கு பேர் போன ஜோடியானன அபிஷேக் ஷர்மா - ட்ராவிஸ் ஹெட் இந்த சீசனில் மற்றொரு ஏமாற்றமளிக்கும் தொடக்கத்தை தந்தது. இருவரும் பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
ஹெட் 8, அபிஷேக் ஷர்மா 18 ரன்கள் என அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். மூன்றாவது பேட்ஸ்மேனாக வந்த இஷான் கிஷன் 17 ரன்களில் நடையை கட்டினார். பவர்ப்ளே ஓவர்களில் சன்ரைசர்ஸ் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் அடித்தது.
மேலும் படிக்க: இப்போதைக்கு இல்லை.. ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி
நிதிஷ் குமார் - கிளாசன் பார்டனர்ஷிப்
இதைத்தொடர்ந்து நிதிஷ் குமார் ரெட்டி - ஹென்ரிச் கிளாசன் ஆகியோர் பார்டனர்ஷிப் அமைத்தனர். இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். நிதானத்தை கடைப்பிடித்து விளையாடிய நிதிஷ் குமார் 34 பந்துகளில் 31 ரன்கள் அடித்து அவுட்டானார்.
மறுமுணையில் கிளாசன் கொஞ்சம் அதிரடி காட்டி 19 பந்துகளில் 27 ரன்கள் அடித்து சாய் கிஷார் பந்தில் போல்டாகி வெளியேறினார். பார்மில் இருந்த இளம் பேட்ஸ்மேனான அனிகேத் வர்மா 18 ரன்கள் அடித்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
கடைசி நேரத்தில் கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்திய கேப்டன் கம்மின்ஸ் 9 பந்துகளில் 22 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார்.
மிரட்டிய குஜராத் பவுலர்களில்
குஜராத் அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஸ்பின்னர் சாய் கிஷார் ஆகியோர் மிரட்டலாக பவுலிங் செய்து சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களை ரன் குவிக்க விடாமல் நன்கு கட்டுப்படுத்தினர். முகமது சிராஜ் 4 ஓவரில் 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சாய் கிஷோர் 4 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இஷாந்த் ஷர்மா மட்டும் மோசமாக பவுலிங் செய்த நிலையில் 4 ஓவர்களில் 53 ரன்கள் வாரி வழங்கினார். இவர் தவிர மற்ற குஜராத் அணிக்காக பவுலிங் செய்த மற்ற 4 பவுலர்கள் 16 ஓவர்களில் 99 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.
