ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுக்கு 5வது வெற்றி.. எளிதாக இலக்கை எட்டி ஜெயித்தது!-சொந்த மண்ணில் ராசியில்லாத ஆர்சிபி
ஐபிஎல் 2025: பஞ்சாப் சார்பில் பிரியான்ஷ் ஆர்யா 16 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களில் நடையைக் கட்டினார். விக்கெட் கீப்பர் இங்லிஷ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். நேஹல் வதேரா சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார்.

ஐபிஎல் 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான மேட்ச்சில் பஞ்சாப் கிங்ஸ் ஜெயித்தது. இது அந்த அணிக்கு 5வது வெற்றி ஆகும். அதேநேரம், சொந்த மண்ணான பெங்களூரில் தோல்வியை சந்தித்து வரும் சோகம் ஆர்சிபிக்கு தொடர்கிறது. பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது. 12.1 ஓவர்களில் 98 ரன்கள் எடுத்தது பஞ்சாப். இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது பஞ்சாப். ஆர்சிபி 4வது இடத்திலும், டெல்லி முதலிடத்திலும், குஜராத் 3வது இடத்திலும் இருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 34வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. கால தாமதம் ஏற்பட்டதால், மேட்ச்சின் ஓவர்கள் 14ஆக குறைக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவர்களில் 95 ரன்கள் சேர்த்தது ஆர்சிபி. 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் விளையாடியது.
முன்னதாக, மழையால் ஆட்டம் கால தாமதம் ஆன போதிலும் ரசிகர்கள் திரும்பிச் செல்லாமல் அரங்கிலேயே ஆர்வத்துடன் காத்திருந்தனர். சிலர் சோகமாக காணப்பட்டனர். ஆனால், மேட்ச் தொடங்கியதும் உற்சாகம் அடைந்தனர்.