ஐபிஎல் 2025: பேட்டிங்கில் மிரட்டிய டி காக்.. கதிகலங்கிய ராஜஸ்தான் பவுலர்கள்! புள்ளிக்கணக்கை தொடங்கிய கொல்கத்தா
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஓபனர் குவண்டைன் டி காக் அதிரடி காட்டியதுடன், சதத்தை நூலிழையில் மிஸ் செய்தார். இந்த சீசனில் முதல் வெற்றியை பெற்று புள்ளிக்கணக்கை தொடங்கியுள்ளது கொல்கத்தா அணி

ஐபிஎல் 2025 தொடரின் 6வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கவுகாத்தியில் நடைபெற்றது வருகிறது. இந்த சீசனின் தொடக்க போட்டியில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் போட்டியில் சன் ரைசர்ஸ்க்கு எதிராக தோல்வியுற்றது.
இதையடுத்து முதல் வெற்றியை பெறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அமைந்தது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இரண்டாவது உள்ளூர் மைதானமாக கவுகாத்தி உள்ளது. இதனால் இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான ஹோம் போட்டியாக அமைந்தது
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்ட்ரைக் பவுலரான சுனில் நரேனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், அவருக்கு பதிலாக மொயின் அலி சேர்க்கப்பட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் வீரர் ஃபசல்ஹாக் பாரூக்கிக்கு பதிலாக இலங்கை ஆல்ரவுண்டர் வானிந்து ஹசரங்கா சேர்க்கப்பட்டுார்.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 151 ரன்கள் எடுத்தது. இதை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிப்பட்டியலிலும் வெற்றி கணக்கை தொடங்கியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சேஸிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜுரல் 33, ஜெயஸ்வால் 29, பராக் 23 ரன்கள் எடுத்தனர்.
இதன் பின்னர் சேஸிங்கில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 15 பந்துகள் எஞ்சியிருக்க, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குவன்டைன் டி காக் 97, ரகுவன்ஷி 22 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் கணக்கை தொடங்கியிருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் 9வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 6வது இடத்துக்கு சென்றுள்ளது.
டி காக் அதிரடி
கடந்த போட்டியில் 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் தந்த குவண்டைன் டி காக், இந்த போட்டியில் தனது பாணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுனில் நரேன் இந்த போட்டியில் விளையாடாத நிலையில், அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட மொயின் அலி ஓபனராக களமிறங்கினார். மெயின் அலி 5 ரன் எடுத்து ரன் அவுட்டாகி வெளியேறினார்.
மறுமுனையில் இருந்த டி காக், ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களுக்கு எதிராக தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவுண்டரிகளால் ரன்களை குவித்த நிலையில், பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து சிறப்பாக பேட் செய்து ரன்கள் குவித்து வந்த டி காக் 36 பந்துகளில் அரைசதமடித்தார். கேப்டன் ரஹானேவும் சிறிய பங்களிப்பு அளித்த நிலையில் 18 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டாகி வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 10.1 ஓவரில் 70 ரன்கள் இருந்தது
இம்பேக்ட் வீரர்
வெங்கடேஷ் ஐயர், ரசல், ரிங்கு சிங் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும் இம்பேக் வீரராக அங்க்கிரிஷ் ரகுவன்ஷி களமிறக்கப்பட்டார். இவரது அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஷயம் வேறு மாதிரியாக நடந்தது.
ஏற்கனவே களத்தில் நன்றாக பேட் செய்து கொண்டிருந்த டி காக் திடீரென கியரை மாற்றி அதிரடி மோடுக்கு மாறினார். அடிக்க வேண்டிய பந்துகளை நன்கு பயன்படுத்தி கொண்ட டி காக், பவுண்டரி, சிக்ஸர்கள் என பறக்கவிட்டார். இதனால் தேவைப்படும் ரன் ரேட் குறைந்தது.
டி காக் - ரகுவன்ஷி ஜோடி இணைந்து 83 ரன்களை சேர்த்தனர். ரகுவன்ஷி பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் 17 பந்துகளில் 22 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். ஓபனரான டி காக் 61 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார். தனது இன்னிங்ஸில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடித்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களில் ஹசரங்கா மட்டுமே விக்கெட் வீழ்த்தினார். கடந்த போட்டியை போல் இந்த போட்டியிலும் ஆர்ச்சர் ரன்களை வாரி வழங்கினார். 2.3 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்த ஆர்ச்சர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
