ஐபிஎல் 2025: கொல்கத்தா துல்லிய பவுலிங்கில் சுருண்ட மிடில் ஆர்டர்.. ராஜஸ்தான் ராயல்ஸ் குறைவான ஸ்கோர்
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரமான பவுலிங்குக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் மிடில் ஆர்டர் எடுபடவில்லை. ஜுரல், ஜெய்ஸ்வால், பராக் ஆகியோர் அதிரடி காட்டியபோதிலும் 151 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது.
ஐபிஎல் 2025 தொடரின் 6வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் தொடக்க போட்டியில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் போட்டியில் சன் ரைசர்ஸ்க்கு எதிராக தோல்வியுற்றது.
அந்த வகையில் முதல் வெற்றியை பெறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அமைந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இரண்டாவது உள்ளூர் மைதானமாக கவுகாத்தி உள்ளது. இதனால் இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான ஹோம் போட்டியாக உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்ட்ரைக் பவுலரான சுனில் நரேனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், அவருக்கு பதிலாக மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் வீரர் ஃபசல்ஹாக் பாரூக்கிக்கு பதிலாக இலங்கை ஆல்ரவுண்டர் வானிந்து ஹசரங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்கியா ரஹானே பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக துருவ் ஜுரல் 33, யஷஸ்வி ஜெயஸ்வால் 29, ரியான் பராக் 25 ரன்கள் எடுத்தனர்.
கொல்கத்தா பவுலர்களில் வைபவ் அரோரா, மொயின் அலி, வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஸ்பென்சர் ஜான்சன் ஒரு விக்கெட்டை எடுத்தார்.
அதிரடி தொடக்கம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிரடி தொடக்கத்தை ஓபனர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோர் அதிரடி தொடக்கத்தை தந்தனர்.இம்பேக் வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 13 ரன்கள் அடித்து விட்டு அவுட்டானார்.
பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது. அடுத்தடுத்து 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட பராக் 15 பந்துகளில் 25 ரன்கள் அடித்துவிட்டு இரண்டாவது விக்கெட்டாக அவுட்டானார். ஓபனராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 24 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்
மிடில் ஆர்டர் சொதப்பல்
மிடில் ஆர்டரில் களமிறங்கிய நிதிஷ் ராணா 8, ஹசரங்கா 4 ரன்னில் வெளியேறினர். இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷுபம் துபே எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் 9 ரன்னில் வெளியேறினார். அதேபோல் அதிரடி பேட்ஸ்மேன் ஷிம்ரான் ஹெட்மேயரும் 7 ரன்னில் அவுட்டானார்.
கடந்த போட்டியில் அதிரடியில் மிரட்டிய துருவ் ஜுரல் மட்டும் கொஞ்ச நேரம் தாக்குபிடித்து பேட் செய்தார். 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
ஆர்ச்சர் கேமியோ
கடைசி கட்டத்தில் பேட் செய்த ஜோப்ரா ஆர்ச்சர் சிறிய கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட ஆர்ச்சர் 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். இவரது இந்த கேமியோ இன்னிங்ஸ் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 150 ரன்களை கடந்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலர்களில் பந்து வீசிய அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்தி 17 ரன்களுக்கு 2 விக்கெட், மொயின் அலி 23 ரன்களுக்கு 2 விக்கெட் என ஸ்பின்னர்கள் இருவரும் சிறப்பாக பவுலிங் செய்தனர்.
