RR vs KKR Preview: முதல் வெற்றிக்கான பலப்பரிட்ச்சை.. புள்ளிக்கணக்கை தொடங்கப்போவது யார்? ராஜஸ்தான் - கொல்கத்தா மோதல்
ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பெறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரிட்சை செய்ய இருக்கின்றன. போட்டி நடைபெறும் பரஸ்பாரா மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 6வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கவுகாத்தியில் நடைபெற இருக்கிறது. இந்த சீசனின் தொடக்க போட்டியில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன் ரைசர்ஸ்க்கு எதிராக தனது முதல் போட்டியில் தோல்வியுற்றது.
அந்த வகையில் முதல் வெற்றியை பெறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அமைகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இரண்டாவது உள்ளூர் மைதானமாக கவுகாத்தி உள்ளது. அடுத்த இரண்டு போட்டிகள் கவுகாத்தியில் வைத்து ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாட இருக்கிறது.
ஆல்ரவுண்டர் இல்லாமல் தவிக்கும் ராஜஸ்தான்
டி20 கிரிக்கெட்டில் எந்த நேரத்திலும் திருப்புமுனை ஏற்படுத்தக்கூடியவர்களாக ஆல்ரவுண்டர்கள் இருந்து வரும் நிலையில், வலிமையான ஆல்ரவுண்டர் இல்லாத அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளது.
மேலும் படிக்க: நடப்பு சாம்பியன் கேகேஆர் அணியை வீழ்த்திய ஆர்சிபி
அதேபோல் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக பவுலிங்கில் ரன்களை வாரி வழங்கிய ராஜஸ்தான் பவுலர்கள், இந்த போட்டியில் ரன்களை கட்டுப்படுத்த வேண்டியில் நிலையில் உள்ளார்கள். பேட்டிங்கை பொறுத்தவரை ஜெய்ஸ்வால், ரியான் பராக், நிதிஷ் ராணா, துருவ் ஜுரல், ஹெட்மேயர் என வலுவாகவே உள்ளது.
ஆல்ரவுண்டர் இல்லாத குறையை போக்க ஹசரங்கா அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெற இருக்கும் கவுகாத்தி மைதானத்தில் இதுவரை 4 போட்டிகள் விளையாடியிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 தோல்வி, ஒரு வெற்றியை மட்டும் பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
சஞ்சு சாம்சன் இந்த போட்டியிலும் இம்பேக்ட் வீரராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரியான் பராக் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார்.
பேட்ஸ்மேன்கள் பங்களிப்பு அவசியம்
ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சொதப்பியது. இதனால் பினிஷிங்கும் சரியாக அமையாமல் போனது. அந்த வகையில் பேட்ஸ்மேன்கள் சூழ்நிலைக்கு ஏற்ப பங்களிப்பு அளிக்க வேண்டிய எதிர்பார்ப்புடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது.
பவுலிங்கை பொறுத்தவரை சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, வேகப்பந்து வீச்சுக்கு ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா போன்றோர் இருக்கிறார்கள். அதிவேகமாக பந்து வீசக்கூடிய அன்ரிச் நார்ட்ஜே ரன்களை வாரி வழங்கியதால் அவருக்கு பதிலாக ஸ்பெனசர் ஜான்சன் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை
இந்த இரு அணிகளும் இதுவரை 30 போட்டிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொலகத்தா நைட் ரைடர்ஸ் 14, ராஜஸ்தான் ராயல்ஸ் 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் முடிவு இல்லை. இரு அணிகளுக்கு இடையே ராஜஸ்தான் ராயல்ஸ் 81 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி மிகவும் குறைவான ஸ்கோர் எடுத்துள்ளது. அதேபோல் 224 ரன்கள் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அதிகபட்ச ஸ்கோர் அடித்துள்ளது.
கடந்த சீசனில் இந்த இரு அணிகள் மோதிக்கொண்ட இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
பிட்ச் நிலவரம்
போட்டி நடைபெற இருக்கும் பாரஸ்பரா மைதானம் பேட்ஸ்மேன்களில் சொர்க்கபுரியாக இருந்துள்ளது. முதலில் பேட் செய்த அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டாலும் பேட்ஸ்மேன்கள் ஜொலிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே மற்றொரு பேட்டிங் விருந்தை பார்க்கலாம் என்றே தெரிகிறது. மழைக்கான வாய்ப்பு குறைவு என்பதால் போட்டி நடப்பதிலும் தடை இருக்காது என்றே தெரிகிறது.
முதல் போட்டியில் பெற்றி தோல்வியில் இருந்து மீண்டு, இந்த போட்டியில் வெற்றியை பெற்று புள்ளிக்கணக்கை தொடங்கும் முனைப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் களமிறங்குகிறது.
