ஐபிஎல் 2025: கொல்கத்தா துல்லிய பவுலிங்.. சரிந்த பஞ்சாப் பேட்டிங்..111 ரன்களில் பொட்டலம்
ஐபிஎல் 2025: ஓபனர்கள் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் அதிரடி தொடக்கத்தை தந்த போதிலும் பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே அவுட்டாகினர். அதன் பின்னர் கொல்கத்தா பவுலர்களின் துல்லிய பவுலிங்கில் சிக்கி பஞ்சாப் பேட்டிங் சரிந்து 111 ரன்களில் பொட்டலம் செய்யப்பட்டது.

ஐபிஎல் 2025 தொடரின் 31வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே முல்லான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்கு முன் பஞ்சாப் கிங்ஸ் 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் தனது முந்தைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது முந்தைய போட்டியில் சிஎஸ்கே அணியை உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் வைத்து வீழ்த்தியது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் காயமடைந்த பெர்குசனுக்கு பதிலாக சேவியர் பார்ட்லெட், ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்க்கு பதிலாக ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா அணியில் மொயின் அலிக்கு பதிலாக அன்ரிச் நார்ட்ஜே சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது.
அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30, பிரியான்ஷ் ஆர்யா 22 ரன்கள் அடித்தனர். கொல்கத்தா பவுலர்களில் ஹர்ஷித் ராணா விக்கெட்டுகளை கைப்பற்றினார். வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அன்ரிச் நார்ட்ஜே மற்றும் வைபவ் அரோரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்
அதிரடி தொடக்கம்
பஞ்சாப் கிங்ஸ் அணியில் பார்மில் இருந்து வரும் பிரியான்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். ஆனாலும் பெரிய ஸ்கோர் குவிக்க முடியவில்லை. பவுண்டரி, சிக்ஸர் என கொல்கத்தா பவுலர்களை வெளுத்து விட்ட ஆர்யா 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுசட்டானார்.
இவரை தொடர்ந்து பேட் செய்ய வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், எதிர்பாராத விதமாக டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மற்றொரு ஓபனரான பிரப்சிம்ரன் சிங் 2 பவுண்டரிகளை அடித்ததோடு, 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். 15 பந்துகளில் 30 ரன்கள் அடித்த இவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்த மூன்று விக்கெட்டுகளையும் ஹர்ஷித் ராணா வீழ்த்தினார். பவர்ப்ளே ஓவர்களில் டாப் 4 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் கிங்ஸ் 54 ரன்கள் எடுத்தது.
சரிந்த பஞ்சாப் பேட்டிங்
மிடில் ஆர்டரில் பேட் செய்ய வந்த நேகல் வாதிரா 10, கிளென் மேக்ஸ்வெல் 7, இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்ட சூரியான்ஷ் ஷெக்டே 4 என அடுத்தடுத்து அவுட்டாகினார்.
விக்கெட் சரிவை தடுக்கும் விதமாக விளையாடி ஷஷாங்க் சிங் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார். டெயில் பேட்ஸ்மேன்களில் யான்சன் 1, சேவியர் பார்லட் 11, அர்ஷ்தீப் 1 ரன்கள எடுத்தனர்.
கொல்கத்தா பவுலர்கள் அபாரம்
பவர் ப்ளே முடிந்த பிறகு பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் ரன் அதிரடியாக பேட் செய்ய வாய்ப்பு தராத வகையில் கொல்கத்தா பவுலர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்ப, அணியின் ரன்ரேட்டும் குறையத்தொடங்கியது.
ஸ்பின்னர்களில் வருண் சக்கரவர்த்தி 4 ஓவரில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், சுனில் நரேன் 3 ஓவரில் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் எடுத்தனர். மற்ற பவுலர்களும் பெரிதாக ரன்களை வாரி வழங்காமல் பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுத்தனர்.
