ஐபிஎல் 2025: 3 சிக்ஸர்கள்.. பயத்தை காட்டிய தோனி! பணிய வைத்த பஞ்சாப்.. சிஎஸ்கேவுக்கு மற்றொரு தோல்வி
ஐபிஎல் 2025: கடைசி கட்டத்தில் மூன்று சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து பஞ்சாப் அணிக்கு பயத்தை காட்டிய தோனி துர்தஷ்டவசமாக அவுட்டானார். கடந்த போட்டிகளை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டபோதிலும் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை பெற்றுள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 22வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே முல்லான்பூரில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் பஞ்சாப் கிங்ஸ் 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் ஐந்தாவது இடத்தில் இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் 9வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்த சீசனில் முதல் முறையாக உள்ளூர் மைதானமான முல்லான்பூரில் களமிறங்கிய பஞ்சாப், முதல் தோல்வியையும் சந்தித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் முந்தைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் வைத்து தோல்வியுற்றது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி பெறும் ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது.
இரு அணிகளும் தங்களது முந்தைய போட்டியில் தோல்வியை பெற்றிருப்பதால், வெற்றி பாதைக்கு திரும்புவதற்கான போட்டியாக அமைந்திருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் என இரு அணிகளும் முந்தைய போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் விளையாடின.