Shreyas Iyer: பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கோப்பையை உயர்த்துவதே என் இலக்கு! பஞ்சாபி கொண்டாட்டம் வேண்டும் – ஷ்ரேயாஸ் ஐயர்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Shreyas Iyer: பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கோப்பையை உயர்த்துவதே என் இலக்கு! பஞ்சாபி கொண்டாட்டம் வேண்டும் – ஷ்ரேயாஸ் ஐயர்

Shreyas Iyer: பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கோப்பையை உயர்த்துவதே என் இலக்கு! பஞ்சாபி கொண்டாட்டம் வேண்டும் – ஷ்ரேயாஸ் ஐயர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Mar 19, 2025 02:51 PM IST

Shreyas Iyer: ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பை வெல்லாமல் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கோப்பையை உயர்த்துவதே என் இலக்கு. இது வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாக இருக்கும். ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்து, கொண்டாட்டத்தில் ஈடுபட வைக்க விரும்புகிறேன் என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கோப்பையை உயர்த்துவதே என் இலக்கு! பஞ்சாபி கொண்டாட்டம் வேண்டும் – ஷ்ரேயாஸ் ஐயர்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கோப்பையை உயர்த்துவதே என் இலக்கு! பஞ்சாபி கொண்டாட்டம் வேண்டும் – ஷ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர் ஜியோஸ்டாரில் ஒளிபரப்பான சூப்பர்ஸ்டார்ஸ் ஆன் ஜியோஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில், ஐபிஎல் 2025 சீசனில் தனது இலக்கு, முதல் ஐபிஎல் அனுபவம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

பஞ்சாப்புக்கு ஐபிஎல் கோப்பை வெல்வதே இலக்கு

சூப்பர்ஸ்டார்ஸ் ஆன் ஜியோஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இதுகுறித்து பேசியதாவது, "நான் ஏலத்தில் தேர்வான தருணத்திலிருந்தே என் நோக்கம் தெளிவாக இருந்தது. பஞ்சாப் கிங்ஸ் இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. எனவே அதை வெல்லச் செய்வதே என் முக்கிய இலக்கு. இது வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாக இருக்கும்.

ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்து, கொண்டாட்டத்தில் ஈடுபட ஒரு காரணம் வழங்க விரும்புகிறேன். சீசனின் முடிவில் ஒரு பாரம்பரிய பஞ்சாபி கொண்டாட்டம் அமைய வேண்டும்" என்று கூறினார்.

தொடர்ந்து பஞ்சாப் அணியை யுவராஜ் சிங் வழிநடத்திக் கொண்டிருந்த காலத்தை நினைவுபடுத்திய அவர், "நான் இர்பான் பதானை லாங்-ஆனில் நின்று பார்த்ததை நினைவு கூர்கிறேன். அவர் எங்கள் அருகே வந்து, ‘மேட்சை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டார். நாங்கள் ‘ஆமாம், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், உங்களை நேரில் பார்ப்பது கனவாக இருக்கிறது’ என்று பதிலளித்தோம்.

அந்தக் காலத்தில் இர்பான் பாய் மிகவும் பிரபலமானவர், மேலும் பஞ்சாப் அணியில் யுவி பாய் (யுவராஜ் சிங்) உட்பட மிக அழகான வீரர்கள் இருந்தார்கள். இது இன்று வரை எனக்கு நினைவில் உள்ளது."

முதல் ஐபிஎல் அனுபவம்

தனது முதல் IPL அனுபவத்தைக் கூறிய ஷ்ரேயாஸ், 2008ஆம் ஆண்டு, 14 வயது இருந்தபோது வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி போட்டியில் பால் பாய் ஆக இருந்தேன். அந்த நேரத்தில் மும்பை U14 அணிக்காக விளையாடினேன். அதனால், எங்களை எல்லாரையும் ball boys ஆக தேர்வு செய்தனர். அது ஐபிஎல் போட்டிகளை நெருக்கமாக அனுபவிக்கும் முதல் தருணமாக அமைந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கம் இருந்தது.

ஆனால் நண்பர்கள் வீரர்களிடம் பேசுவதை பார்த்தவுடன் நானும் முயற்சி செய்தேன். ராஸ் டெய்லர் என் விருப்பமான வீரர். எனவே அவரிடம் சென்று ‘சர், நான் உங்களின் பெரிய ரசிகன்’ என்று கூறினேன். அவர் மிக இனிமையாக ‘நன்றி’ கூறினார். அப்போது வீரர்களிடம் பேட் அல்லது கையுறைகளை கேட்பது வழக்கமானது. ஆனால் நான் மிகவும் தடுமாறினேன், கேட்டிருக்கலாம் என்பதே இன்று வரையிலும் என் மனதில் உள்ளது.

டிரெஸிங் ரூமில் சொந்த மொழியில் பேசுவோம்

கிரிக்கெட் கமெண்டரியில் பிராந்திய மொழிகளின் பயன்பாட்டைப் பற்றிப் பேசும்போது, "நாங்கள் அதை ரசிக்கிறோம். கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் இருந்தே டிரெஸிங் ரூமில் எங்கள் சொந்த மொழியில் பேசுவோம்.

மும்பையில் கூட, சில ஷாட்களுக்கு வேறு பெயர்கள் வைத்திருப்போம். ஒவ்வொரு பகுதிக்கும் தத்தம் சொந்த விளக்கம் இருக்கும். முதன்முதலாக பிராந்திய மொழியில் கமெண்ட்ரி கேட்கும் போது கலாச்சார அதிர்ச்சி உண்டானது. 'வாவ், கிரிக்கெட்டில் இப்படி சொல்லலாமா?’ என்று ஆச்சரியப்பட வைத்தது" என்றார்.

ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மார்ச் 25ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.