ஐபிஎல் 2025: பேட்டிங், பவுலிங்கில் அற்புதம்.. வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் மேலே ஏறிய லக்னோ.. கீழே இறங்கிய குஜராத்
ஐபிஎல் 2025: நல்ல பார்மில் இருக்கும் குஜராத் அணிக்கு எதிராக பேட்டிங், பவுலிங்கில் அற்புதமாக செயல்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் மேலே ஏறியுள்ளது. முதல் இடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ் இந்த தோல்வியால் கீழே இறங்கியுள்ளது.
ஐபிஎல் 2025 தொடரின் 26வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே லக்னோ ஏகானா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் 4 வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது முந்தைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. குஜராத் டைட்டன்ஸ் தனது முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் மிட்செல் மார்ஷ்க்கு பதிலாக ஹிம்மத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 180 ரன்கள் எடுத்த நிலையில், இந்த ஸ்கோரை சேஸ் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ சேஸிங்
முன்னதாக, டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பந்த் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ்் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 3 பந்துகள் எஞ்சியிருக்க 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 68, ஐடன் மார்க்ரம் 58 ரன்கள் அடித்தனர். குஜராத் பவுலர்களில் பிரசித் கிருஷ்ணா 2, ரஷித் கான் ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இந்த வெற்றியால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடர் வெற்றி பயனத்துக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்த வெற்றியால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு கீழே இறங்கியுள்ளது.
பந்த் தடுமாற்றம்
இந்த சீசனில் பேட்டிங்கில் தடுமாறும் ரிஷப் பந்த், இந்த போட்டியில் தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி ஓபனராக களமிறங்கினார். அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தபோதிலும் 18 பந்துகளில் 21 ரன்கள் அடித்து அவுட்டானர். பேட்டிங்கில் ரிஷப் பந்த் மோசமான பார்ம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தொடர்ந்துள்ளது. இருப்பினும் கடந்த நான்கு போட்டிகளில் குவித்த ஸ்கோரை விட அதிகமான ரன்களை அவர் எடுத்திருப்பது அணிக்கு ஆறுதல் தரும் விஷயமாக அமைந்துள்ளது.
அத்துடன் ஓபனிங்கில் களமிறங்கிய மார்க்ரம் - பந்த் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளே ஓவர்களில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் குவித்தது.
மார்க்ரம் - பூரான் அதிரடி
ஆரஞ்சு தொப்பி வைத்திருப்பவரான பார்மில் இருக்கும் பூரான் இந்த போட்டியில் வழக்கபோல் தனது அதிரடியை தொடர்ந்தார். தொடக்கத்தில் இருந்து சிறப்பாக பேட் செய்து வரும் மார்க்ரமும் இணைந்து ரன் வேட்டையில் ஈடுபட்டார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது.
ஓபனராக பேட் செய்த மார்கரம் 26 பந்துகளில் அரைசதமடித்த நிலையில், 58 ரன்களில் அவுட்டானார். தனது இன்னிங்ஸில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார்.
இதேபோல் தொடர்ச்சியாக சிக்ஸர்களாக பறக்க விட்டு வான வேடிக்கை காட்டி வந்த நிக்கோலஸ் பூரான் 23 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். 34 பந்துகளில் 61 ரன்கள் அடித்த பூரான் தனது இன்னிங்ஸில் 7 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்தார். இம்பேக்ட் வீரராக பேட் செய்ய வந்த ஆயுஷ் பதோனியும் சிறப்பாக பங்களிப்பு செய்து 28 ரன்கள் அடித்தார்.
அடிவாங்கிய சிராஜ், சாய் கிஷோர்
குஜராத் அணியின் ஸ்டிரைக் பவுலர்களாக கடந்த போட்டிகளில் ஜொலித்து வந்த முகமது சிராஜ், சாய் கிஷோர் ஆகியோர் இந்த போட்டியில் லக்னோ பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அடிவாங்கியுள்ளனர். சிராஜ் 4 ஓவர்களில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. அதேபோல் சாய் கிஷோர் 1.3 ஓவரில் 35 ரன்கள் வாரிவழங்கினார்.
கட்டுக்கோப்பாக பந்து வீசிய பிரசித் கிருஷ்ணா 4 ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அத்துடன் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
