ஐபிஎல் 2025: பார்முக்கு திரும்பிய பந்த்.. லக்னோவை கட்டுப்படுத்திய சிஎஸ்கே பவுலர்கள்! 167 ரன்கள் இலக்கு
ஐபிஎல் 2025: பார்மில் இருந்து வந்த மார்க்ரம், பூரான் ஆகியோரை பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே தூக்கினர் சிஎஸ்கே பவுலர்கள். இருப்பினும், பேட்டிங்கில் தடுமாறி வந்த பந்த் இந்த சீசனில் முதல் அரைசதமடித்துள்ளார்

ஐபிஎல் 2025 தொடரின் 30வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே லக்னோ ஏகானா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்கும் முன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 6 போட்டிகளில், ஒரு வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்ரி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளூர் மைதானமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக தோல்வியுற்றது.
இந்த சீசனின் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 தொடர் தோல்விகளை சந்தித்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், கட்டாய வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது.
சிஎஸ்கே அணியில் அஸ்வின், கான்வே ஆகியோருக்கு பதிலாக ஷேக் ரஷீத், ஓவர்டன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். லக்னோ அணியில் முந்தைய போட்டியில் விளைாடாத மிட்சல் மார்ஷ் திரும்பியுள்ளார்.
சிஎஸ்கே பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 60, மிட்செல் மார்ஷ் 30 ரன்கள் எடுத்தனர்.
சிஎஸ்கே பவுலர்களில் ரவீந்திர ஜடேஜா, பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். கம்போஜ், கலீல் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
மோசமான தொடக்கம்
சிஎஸ்கே பவுலர்களின் அற்புத பந்து வீச்சில் லக்னோ அணியில் பார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்களான ஐடன் மார்க்ரம் 6, பூரான் 8 ரன்னில் அவுட்டாகினர். பவர்ப்ளே முடிவில் லக்னோ அணி 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் எடுத்தது.
ஓபனராக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் கொஞ்சம் அதிரடியாக பேட் செய்து 25 பந்துகளில் 30 ரன்கள் அடித்து ஜடேஜா பந்தில் போல்டாகி வெளியேறினார்.
பார்முக்கு திரும்பிய பந்த்
இந்த சீசனில் பேட்டிங்கில் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வந்த பந்த், இந்த போட்டியில் பார்முக்கு திரும்பினார். நிதானமும், அதிரடியும் கலந்து ரன்களை குவித்த பந்த தனது ட்ரேட் மார்க் ஷாட்களான ரிவர்ஸ் ஸ்வீப், ஒத்த கை ஷாட் மூலம் சிக்ஸர்களை பறக்கவிட்டார். 41 பந்துகளில் அரைசதமடித்த பந்த் ஆட்டத்தின் கடைசி ஓவரில் அவுட்டானார். 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடித்த பந்த்் 49 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
ஆயுஷ் பதோனி சிறிய கேமியோ இன்னிங்ஸ் வெளிப்படுத்தி 22 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடி வெளிப்படுத்திய அப்துல் சமாத் 20 ரன்கள் அடித்து தோனியின் அற்புத த்ரோவில் சிக்கி ரன்அவுட்டானார்.
சிஎஸ்கே பவுலர்கள் அபாரம்
சிஎஸ்கே பவுலர்களில் ஸ்பின்னர் நூர் அகமது விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். அதேபோல் ஜடேஜா 3 ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இளம் பவுலரான அன்சுல் கம்போஜ் 3 ஓவர்களில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் பதிரனா மட்டும் 4 ஓவர்களில் 45 ரன்களை வாரி வழங்கி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
