ஐபிஎல் 2025: ரஹானே அதிரடி அரை சதம்.. க்ருணால் பாண்டியா, ஜோஷ் ஹேஸில்வுட் தரமான பவுலிங்.. கேகேஆர் 174 ரன்கள்
ஐபிஎல் 2025: பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக ஆடிய அஜிங்க்யா ரஹானே முன்னணியில் இருந்து வழிநடத்தினார், அவர் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினார்.

ஐபிஎல் 2025: கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடந்துவரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தொடக்க ஆட்டத்தில் பவர்பிளே ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணிக்காக அஜிங்க்யா ரஹானே அதிரடியாக விளையாடினார். அவர் கேகேஆர் கேப்டனாக அரை சதம் பதிவு செய்தார். அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை எடுத்தது. 175 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி விளையாடவுள்ளது.
குவின்டன் டி காக், சுனில் நரேன் ஆகியோர் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். டி காக் 4 ரன்கள் எடுத்திருந்த முதல் ஓவரிலேயே ஹேஸில்வுட் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். பின்னர் கேப்டன் அஜிங்க்ய ரஹானே களம் புகுந்தார். அவர் 31 பந்துகளில் அரை 56 ரன்கள் எடுத்தார். அப்போது க்ருணால் பாண்டியா பந்துவீச்சில் ரஷிக் சலாமிடம் கேட்ச் ஆனார். 6 ஃபோர்ஸ், 4 சிக்ஸர்களை விளாசினார் ரஹானே. இவரும் நரேனும் பார்ட்னர்ஷிப்பில் அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்த உதவினர். ஆனால், க்ருணால் பாண்டியா அந்த கூட்டணியை உடைத்தார். அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் விக்கெட்டையும் க்ருணால் காலி செய்தார். சுனில் நரேனும் 44 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.
க்ருணால் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். இது ஆர்சிபிக்காக அவரது முதல் மேட்ச் ஆகும். அதேபோல், ஜோஷ் ஹேஸில்வுட் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை சுருட்டினார்.