ஐபிஎல் 2025: 239 ரன்கள் இலக்கை விரட்டி வந்த கொல்கத்தா.. 4 ரன்களில் லக்னோ த்ரில் வெற்றி! புள்ளிப்பட்டியலில் மாற்றம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: 239 ரன்கள் இலக்கை விரட்டி வந்த கொல்கத்தா.. 4 ரன்களில் லக்னோ த்ரில் வெற்றி! புள்ளிப்பட்டியலில் மாற்றம்

ஐபிஎல் 2025: 239 ரன்கள் இலக்கை விரட்டி வந்த கொல்கத்தா.. 4 ரன்களில் லக்னோ த்ரில் வெற்றி! புள்ளிப்பட்டியலில் மாற்றம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 08, 2025 08:29 PM IST

ஐபிஎல் 2025: ஆட்டத்தின் கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19 ரன்கள் அடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 ரன்னில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியால் டாப் 4 இடத்துக்கு முன்னேறியது லக்னோ

239 ரன்கள் இலக்கை விரட்டி வந்த கொல்கத்தா.. 4 ரன்களில் லக்னோ த்ரில் வெற்றி! புள்ளிப்பட்டியலில் மாற்றம்
239 ரன்கள் இலக்கை விரட்டி வந்த கொல்கத்தா.. 4 ரன்களில் லக்னோ த்ரில் வெற்றி! புள்ளிப்பட்டியலில் மாற்றம் (AP)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது முந்தைய போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக வெற்றியை பெற்றது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மும்பை அணியை தோற்கடித்தது. புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் இந்த இரு அணிகளும் இருக்கும் நிலையில், டாப் 4 இடத்துக்கு முன்னேறும் விதமாக இந்த போட்டி அமைந்திருந்தது. லக்னோ அணியில் விளையாடும் ஷர்துல் தாக்கூருக்கு இது 100வது ஐபிஎல் போட்டியாகவும் இருந்தது.

இதையடுத்து முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 238 ரன்கள் குவித்த நிலையில், மிக பெரிய இந்த இலக்கை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 ரன்னில் தோல்வியை தழுவியது.

கொல்கத்தா சேஸிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ரஹானே பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட் செய்த லக்னோ அணி நிகோலஸ் பூரான் மற்றும் மிட்செல் மார்ஷ் அதிரடியால் 238 ரன்கள் அடித்தது. இந்த பெரிய ஸ்கோரை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து 4 ரன்களில் தோல்வியுற்றது.

அதிகபட்சமாக ரஹானே 61, வெங்கடேஷ் ஐயர் 45, ரிங்கு சிங் 38 ரன்கள் எடுத்தனர். லக்னோ பவுலர்களில் ஆகாஷ் தீப் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஆவேஷ் கான், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியால் லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆறாவது இடத்துக்கு கீழே இறங்கியுள்ளது.

பவர்ப்ளேயில் மிரட்டல் அடி

239 ரன்களை விரட்டிய கொல்கத்தா அணி பவர்ப்ளே ஓவர்களை நன்கு பயன்படுத்தி கொண்டது. இந்த சீசனில் பெரிதாக பேட்டிங்கில் ஜொலிக்காமல் இருந்து வந்த சுனில் நரேன், தனது பாணி அதிரடியில் ரன்களை குவித்தார். 13 பந்துகளில் 30 ரன்கள் விரைவாக அடித்த அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு ஓபனரான குவன்டைன் டி காக் 15 ரன்கள் அடித்து நடையை கட்டினார். பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒரு விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் அடித்தது.

ஓபனர்கள் அவுட்டானபோதிலும் அடுத்து வந்த ரஹானே, வெங்கடேஷ் ஜோடி அதிரடியை தொடர்ந்தனர். இருவரும் லக்னோ பவுலர்களுக்கு எதிராக பவுண்டரி, சிக்ஸர்கள் என மாறி மாறி அடித்தனர்.

மிடில் ஆர்டர் சொதப்பல்

இதனால் அணியின் ஸ்கோரும் உயர்ந்ததோடு, தேவைப்படும் ரன்ரேட்டும் அதிகரிக்காமல் இருந்தது. சிறப்பாக பேட் செய்து வந்த ரஹானே 26 பந்துகளில் அரைசதமடித்த நிலையில், 61 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் வெங்கடேஷ் ஐயரும் 29 பந்துகளில் 45 ரன்கள் அடித்து அவுட்டானார்.

இவரை தொடர்ந்து கொல்கத்தா மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரமன்தீப் சிங் 1, இம்பேக் வீரராக களறிங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி 5, ஆண்ட்ரே ரசல் 7 என அடுத்தடுத்து அவுட்டானார்கள். அத்துடன் தேவைப்படும் ரன் ரைட்டும் அதிகரித்து கொல்கத்தாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

ரிங்கு சிங் கேமியோ

பார்மில் இல்லாமல் தவித்து வந்த ரிங்கு சிங் பின் வரிசையில் களமிறங்கிய நிலையில் சரியான நேரத்தில் தனது பார்மை மீட்டெடுத்தார். பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்து அணியின் ஸ்கோரை இலக்கை நோக்கி எடுத்து சென்றார்.

ஆட்டத்தில் கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 19 ரன்கள் அடிக்கப்பட்டது. இதையடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றியை பெற்றது.

லக்னோ பவுலர்கள் அனைவரின் ஓவர்களிலும் கொல்கத்தா பேட்ஸ்கள் அதிரடியாக பேட் செய்து ரன்களை குவித்தனர். திக்வேஷ் சிங் மட்டும் ஓரளவு கட்டுப்பாடுடன் பந்து வீசி 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.