ஐபிஎல் 2025: அனைவருக்கும் நன்மை செய்யும் முடிவு.. பின் வரிசையில் பேட் செய்ய இதுதான் காரணம்.. தோனி சொன்ன விஷயம்
ஐபிஎல் 2025: சில வீரர்களை புரொமோட் செய்வதால் அணி பாதிக்கப்படும் என்பது கிடையாது. எனவே, எல்லோரும் அந்த பாத்திரத்தையும் பொறுப்பையும் செய்கிறார்கள், அது எனக்கு சில அழுத்தத்தைக் குறைக்கிறது என்றால் ஏன் அதை செய்யக்கூடாது என பின்வரிசையில் களமிறங்குவது குறித்து தோனி கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்கு எதிராக 17 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் தோல்வியடைந்துள்ளது சிஎஸ்கே அணி. ஐபிஎல் தொடங்கிய 2008 சீசனில் முதல் முறையாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியுற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், அதன் பிறகு தொடர்ச்சியாக இங்கு வெற்றி பெற்று வந்தது. இதையடுத்து இந்த சீசனில் ஆர்சிபிக்கு எதிராக சேப்பாக்கத்தில் வைத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே மிகவும் மோசமான தோல்வியடைந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே பெற்ற மிகவும் மோசமான தோல்விகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது.
197 ரன்கள் ரன்கள் என்ற மிக பெரிய இலக்கை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எம்எஸ் தோனி 9வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.
சிஎஸ்கே வெற்றி பெற 28 பந்துகளில் 98 ரன்கள் தேவை என்ற நிலையில் தான் தோனி களமிறங்கினார். இந்த சூழலில் தோல்வி என்பது சிஎஸ்கேவுக்கு கிட்டத்தட்ட உறுதியானது. இதையடுத்து போட்டியின் முடிவுக்கு பின் தோனி களமிறங்கிய இடம் குறித்து ரசிகர்கள் அதிருப்தியும், விமர்சனத்தையும் வெளிப்படுத்தினர். தோனி முன்னரே வந்திருந்தால் அணியை வெற்றியை நோக்கி எடுத்து சென்றிருப்பார் அல்லது தோல்வி அடைந்தாலும் வெற்றி அருகிலாவது அணியின் ஸ்கோரை கொண்டு வந்திருப்பார். இப்படியான வாய்ப்பு இருக்கும் போது ஏன் அவர் பின் வரிசையில் களமிறங்கினார் என பலரும் கேள்வி எழுப்பினர்.