ஐபிஎல் 2025: சாய் சுதர்சன் நங்கூர இன்னிங்ஸ்.. ஷாருக்கான், பட்லர் அதிரடி! ராஜஸ்தானுக்கு சவால் இலக்கை வைத்த குஜராத்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: சாய் சுதர்சன் நங்கூர இன்னிங்ஸ்.. ஷாருக்கான், பட்லர் அதிரடி! ராஜஸ்தானுக்கு சவால் இலக்கை வைத்த குஜராத்

ஐபிஎல் 2025: சாய் சுதர்சன் நங்கூர இன்னிங்ஸ்.. ஷாருக்கான், பட்லர் அதிரடி! ராஜஸ்தானுக்கு சவால் இலக்கை வைத்த குஜராத்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Apr 09, 2025 09:38 PM IST

ஐபிஎல் 2025: சாய் சுதர்சன் நிதான இன்னிங்ஸ், ஷாருக்கான், பட்லர், தெவாட்டியா ஆகியோரின் அதிரடியால் குஜராத் டைட்டன்ஸ் 217 ரன்கள் குவித்துள்ளது. ராஜஸ்தான் பவுலர்களில் துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்சனா ஆகியோர் இணைந்து 8 ஓவர்களில் 107 ரன்கள் வாரி வழங்கியுள்ளனர்.

சாய் சுதர்சன் நங்கூர இன்னிங்ஸ்.. ஷாருக்கான், பட்லர் அதிரடி! ராஜஸ்தானுக்கு சவால் இலக்கை வைத்த குஜராத்
சாய் சுதர்சன் நங்கூர இன்னிங்ஸ்.. ஷாருக்கான், பட்லர் அதிரடி! ராஜஸ்தானுக்கு சவால் இலக்கை வைத்த குஜராத்

இந்த போட்டி தொடங்கும் முன் குஜராத் டைட்ன்ஸ் 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 7வது இடத்தில் உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் தனது முந்தைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை அதன் உள்ளூர் மைதானமான ஹைதராபாத்தில் வைத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பஞ்சாப் கிங்ஸ் உள்ளூர் மைதானமான முல்லான்பூரில் வைத்து அந்த அணியை தோற்கடித்து தனது முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.

இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் வெற்றியடைந்திருப்பதால், அந்த பயணத்தை தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முன்னேறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. குஜராத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஹசரங்காவுக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் பவுலர் ஃபசல்ஹாக் ஃபரூக்கி சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82, ஜோஸ் பட்லர் 36, ஷாருக்கான் 36 ரன்கள் அடித்தனர். ராஜஸ்தான் பவுலர்களில் மகேஷ் தீக்சனா, துஷார் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சந்தீப் ஷர்மா, ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

சாய் சுதர்சன் நிதானம்

குஜராத் அணியின் ஓபனராக களமிறங்கிய கேப்டன் கில் 2 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு ஓபனரான சாய் சுதர்சன் தனது வழக்கமான பாணியில் நங்கூர இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரி சிக்ஸர்கள் என அடித்த அவர் பொறுப்புடன் பேட் செய்து ரன்களை குவித்தார்.

32 பந்துகளில் அரைசதமடித்த அவர், அதன் பிறகும் அதிரடியில் இறங்காமல் தனது நிதான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். பொறுமையாக பேட் செய்தாலும் ஸ்டிரைக் ரேட்டை 150க்கு மேல் வைத்திருந்த சாய் சுதர்சன் ஓபனராக பேட் செய்ய வந்து ஆட்டத்தின் 18.2 ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 53 பந்துகளில் 82 ரன்கள் அடித்த அவர் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடித்தார்.

பட்லர், ஷாருக்கான் அதிரடி

மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய பட்லர், நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஷாருக்கான் ஆகியோர் தங்களது பாணியில் அதிரடியை வெளிப்படுத்தினர். ராஜஸ்தான் பவுலர்களுக்கு எதிராக பவுண்டரிகளை விரட்டினர். ஷாருக்கான் இரண்டு சிக்ஸர்கள் பறக்க விட்டு வானவேடிக்க காட்டினார்.

பட்லர் 25 பந்துகளில் 36 ரன்கள், ஷாருக்கான் 20 பந்துகளில் 36 ரன்கள் விரைவாக அடித்து விட்டு அவுட்டானார்கள். கடைசி நேரித்தில் சிறிய கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்திய ராகுல் தெவாட்டியா 12 பந்துகளில் 24 ரன்கள் அடித்தார். தனது இன்னிங்ஸில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார். அத்துடன் ரஷித் கான் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 4 பந்துகளில் 12 ரன்கள் அடித்து பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

தேஷ்பாண்டே, தீக்சனா மோசமான பவுலிங்

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களில் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரிகளில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்து கட்டுப்பாடுடன் பந்து வீசினார்.

வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும் 4 ஓவர்களில் 53 ரன்கள் வாரி வழங்கினார். ஸ்பின்னரான மகோஷ் தீக்சனாவும் 4 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர்கள் இருவரும் கூட்டாக 8 ஓவர்களில் 107 ரன்களை விட்டுக்கொடுத்தனர். சந்தீப் ஷர்மா 4 ஓவர்களில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்த குஜராத் டை்டன்ஸ், முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. கடைசி 10 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை குவித்தது.