ஐபிஎல் 2025: சிக்ஸர் மழை.. ஷ்ரேயாஸ் நான் ஸ்டாப் அதிரடி.. மிஸ்ஸான சதம்! ஆரம்பத்திலேயே குஜராத்துக்கு விழுந்த பலத்த அடி
ஐபிஎல் 2025: கேப்டன் இன்னிங்ஸை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர், பவர்ப்ளே ஓவர்களில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் 3 ரன்களில் மிஸ் செய்தார். தொடக்க போட்டியிலேயே உள்ளூர் மைதானத்தில் குஜராத் பவுலர்களுக்கு பலத்த அடி விழுந்துள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 5வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் முதல் போட்டியில் களமிறங்கும் கடைசி அணிகளாக குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொள்கின்றன.
பஞ்சாப் கிங்ஸ் புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது. குஜராத் டைட்ன்ஸ் அணிக்கு கடந்த சீசனில் கேப்டன்சி செய்த சுப்மன் கில் இந்த சீசனிலும் கேப்டன்சியை தொடர்கிறார்.
குஜராத் பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் விக்கெட் 5 இழப்புக்கு 243 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 97, பிரியான்ஷ் ஆர்யா 47, ஷஷாங்க் சிங் 44 ரன்கள் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே டக் அவுட்டானார்.
குஜராத் பவுலர்களில் தமிழ்நாடு வீரரான சாய் கிஷேர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரஷித் கான், ககிசோ ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
நல்ல தொடக்கம்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை தந்த புதிய வீரரான பிரியான்ஷ் ஆர்யா. தொடக்கம் முதலே குஜராத் பவுலர்களை அடித்து துவைத்த இவரது அதிரடியால் பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்தது. 23 பந்துகளில் 47 ரன்கள் அடித்த ஆர்யா பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவரில் தனது விக்கெட்டை ரஷித்கானிடம் பறிகொடுத்தார்.
ஷ்ரேயாஸ் அதிரடி
ஆட்டத்தின் 3வது ஓவரிலேயே களமிறங்கிய ஷ்ரேயாஸ், கடைசி ஓவர் வரை அதிரடியில் மிரட்டினார். நான் ஸ்டாப்பாக மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து விரைவாக ரன்களை குவித்தார். 27 பந்துகளில் அரைசதமடித்த ஷ்ரேயாஸ், அதன் பிறகும் தனது அதிரடியை தொடர்ந்தார். கடைசி வரை அவுட்டாகமல் இருந்த ஷ்ரேயாஸ் 42 பந்துகளில் 97 ரன்கள் அடித்து சதத்தை மிஸ் செய்தார். தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, 9 சிக்ஸர்களை அடித்தார்.
ஷ்ரேயாஸ் அதிரடிக்கு இடையே சிறிய கேமியே இன்னிங்ஸை வெளிப்படுத்திய ஸ்டோய்னிஸ் 15 பந்துகளில் 20 ரன்கள் அடித்தார். அதேபோல் கடைசி கட்டத்தில் களமிறங்கிய ஷஷாங்க் சிங் தனது வழக்கமான பாணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணிக்கு நல்ல பினிஷிங்கை கொடுத்த ஷஷாங்க் சிங் 16 பந்துகளில் 44 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார்.
சாய் கிஷோர் அபாரம்
தமிழ்நாட்டை சேர்ந்த இடது கை ஸ்பின்னரான சாய் கிஷோர் அபாரமாக பந்து வீசி பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியாக அமைந்தார். முதல் 2 ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இவரது மூன்றாவது ஓவரில் களத்தில் இருந்த ஷ்ரேயாஸ் 2 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியை அடித்தார். அதன் பிறகு கடைசி ஓவரில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்ததுடன் ஸ்டோய்னிஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார். 4 ஓவரில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்த சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அத்துடன் குஜராத் டைட்டன்ஸ் பவுலர்களில் சாய் கிஷோர் தவிர மற்ற பவுலர்கள் அனைவரும் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் ரன்கள் வாரி வழங்கியுள்ளனர்.
