ஐபிஎல் 2025: முதல் ரவுண்ட் போட்டிகள் நிறைவு! பட்லர் அதிரடி..டெல்லிக்கு எதிராக வெற்றி.. டாப் இடத்துக்கு முன்னேறிய குஜராத்
10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில், 14 லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் விளையாடுகிறது. அதன்படி குஜராத் - டெல்லி போட்டி முடிவுற்ற பிறகு அனைத்து அணிகளும் 7 போட்டிகளில் விளையாடிய நிலையில், முதல் ரவுண்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ளது. டெல்லியை வீழ்த்திய குஜராத் அணி டாப் இடத்துக்கு முன்னேறியது

ஐபிஎல் 2025 தொடரின் 35வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் குஜராத் டைட்டன்ஸ் 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 6 போட்டிகளில் 5 வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 203 ரன்கள் குவித்த நிலையில், இந்த ஸ்கோரை சேஸ் செய்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் சேஸிங்
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. எந்த பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்காத நிலையில், டெல்லி இவ்வளவு பெரிய ஸ்கோரை குவித்தது.
