ஐபிஎல் 2025: மாறி மாறி சிக்ஸர்கள்.. அதிரடி காட்டிய டெல்லி பேட்ஸ்மேன்கள்.. Tired ஆன குஜராத் பவுலர்கள்! சவால் இலக்கு
டெல்லி டாப் 6 பேட்ஸ்மேன்களும் சிக்ஸர்களை பறக்க விட்டு கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்தினர். குஜராத் பவுலர்கள் அனைவரும் ரன் வாரி வழங்கிய நிலையில், பிரசித் கிருஷ்ணா மட்டும் ரன்களை விட்டுக்கொடுத்ததோடு, 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

ஐபிஎல் 2025 தொடரின் 35வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் குஜராத் டைட்டன்ஸ் 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி 6 போட்டிகளில் 5 வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் முந்தைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. டெல்லி கேபிடல்ஸ் முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
இதையடுத்து குஜராத் தோல்வியில் இருந்து மீளும் விதமாக, டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பயணத்தை தொடரும் விதமாக களமிறங்கியுள்ளன. இந்த போட்டி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கான ஆட்டமாக அமைந்துள்ளது. முந்தைய போட்டியில் விளையாடிய அதே அணிகளுடன் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் என இரு அணிகளும் களமிறங்கியுள்ளன.
குஜராத் பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக அக்சர் படேல் 39, அசுடோஷ் ஷ்ரமா 37, ட்ர்ஸ்டன் ஸ்டப்ஸ் 31, கருண் நாயர் 31
குஜராத் டைட்டன்ஸ் பவுலர்களில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அர்ஷத் கான், முகமது சிராஜ், இஷாந்த் ஷர்மா, சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.
நல்ல தொடக்கம்
தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வந்த மெக்குர்க், இந்த போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. இதையடுத்து ஓபனர்களாக அபிஷேக் போரல், கருண் நாயர் ஆகியோர் களமிறங்கினர். 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அதிரடி காட்டிய போரல் 18 ரன்னில் அவுட்டானார்.
மூன்றாவது பேட்ஸ்மேனாக பேட் செய்த கேஎல் ராகுல் 14 பந்துகளில் 28 ரன்கள் அடித்துவிட்டு பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே அவுட்டானார். பவர்ப்ளே முடிவில் டெல்லி கேபிடல்ஸ் 2 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் குவித்தது.
மற்றொரு ஓபனரான கருண் நாயரும் பவுண்டரி, சிக்ஸர் என ரன்களை சேர்த்தார். 18 பந்துகளில் 31 ரன்கள் அடித்த கருண் நாயர் தனது விக்கெட்டை இழந்தார்.
அக்சர் படேல் நிதானம்
நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய அக்சர் படேல் நிதானம் மற்றும் அதிரடி கலந்து விளையாடினார். மிடில் ஓவர்களில் விக்கெட் சரிவை தடுத்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். 21 பந்துகளில் 39 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டானார். மிடில் ஆர்டரில் பேட் செய்த ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்கள் அடித்தார்.
அசுடோஷ் ஷர்மா அதிரடி பினிஷ்
ஆல்ரண்டரான விப்ராஜ் நிகம் முதல் பந்திலேயே டக்அவுட்டாகி வெளியேறினார். கடைசி கட்டத்தில் அதிரடியில் மிரட்டிய அசுடோஷ் ஷர்மா, பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் மூலம் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 19 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்கள் அடித்து ஆட்டத்தின் கடைசி ஓவரில் அவுட்டானார்.
பிரசித் கிருஷ்ணா அபாரம்
குஜராத் பவுலிங்கை பொறுத்தவரை அனைவரின் ஓவர்களையும் டெல்லி பேட்ஸ்மேன்கள் அடித்து துவைத்தனர். வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்த போதிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அணியின் முக்கிய ஸ்பின்னரான சாய் கிஷோர் ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசினார். 9 ரன்களை விட்டுக்கொடுத்த அவர் ஒரு விக்கெட்டும் எடுத்தார்.
