ஐபிஎல் 2025: முதல் பந்திலேயே டக் அவுட்.. ஐபிஎல் போட்டிகளில் மோசமான சாதனை புரிந்த மேக்ஸ்வெல்
ஐபிஎல் 2025: சாய் கிஷோர் பவுலிங் செய்ய எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார் மேக்ஸ்வெல். ஆனால் ரீப்ளையில் அந்த பந்து ஸ்டம்பில் படாமல் மிஸ்ஸானது தெரியவந்தது. ரிவீயூ கேட்காத காரணத்தால் மேக்ஸ்வேல் ஐபிஎல் பயணத்தில் மற்றொரு டக் அவுட்டாக இது அமைந்தது.

ஐபிஎல் 2025 தொடரின் 5வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் முதல் போட்டியில் களமிறங்கும் கடைசி அணிகளாக குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொள்கின்றன.
இதையடுத்து இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர், ஷஷாங்க் சிங் ஆகியோரின் அதிரடியால் பஞ்சாப் கிங்ஸ் 243 ரன்கள் குவித்தது. குஜராத் பவுலர்கள் சாய் கிஷோர் மட்டும் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேக்ஸ்வெல் டக்அவுட்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல், ஆட்டத்தின் 10வது ஓவரில் களமிறங்கினார். சாய் கிஷோர் வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயற்சித்து பந்தை மிஸ் செய்தார்.
இதையடுத்து எல்பிடபிள்யூ அப்பீல் செய்யப்பட்ட நிலையில், அவுட்டாகி வெளியேறினார். அம்பயர் அவுட் சொன்னதும் தலையை ஆட்டியவாறு டக்அவுட் நோக்கி சென்றார் மேக்ஸ்வெல். அப்போது காண்பிக்கப்பட்ட ரீப்ளையில், சாய் கிஷார் வீசிய பந்து ஸ்டம்பில் படாமல் மிஸ்ஸானது தெரியவந்தது.
இதை கண்டதும் பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங், ரிவியூ கேட்காத மேக்ஸ்வெல் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோபத்துடன் காணப்பட்டார்.
முன்னதாக, எல்பிடபிள்யூவுக்கு பின் களத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸிடம் உடனடியாக மேக்ஸ்வெல் கலந்துரையாடினார். பின் ரிவியூ கேட்க வேண்டாம் என முடிவெடுத்து வெளியேறினார். ஆனால் மேக்ஸ்வெல் ரிவியூ கேட்டிருந்தால் தப்பித்திருக்கலாம். மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே அவுட்டானது பஞ்சாப் அணிக்கு சாதகமாக அமைந்தது.
மோசமான சாதனை
இந்த சீசனின் தொடக்க போட்டியில் டக் அவுட்டாகி இருக்கும் மேக்ஸ்வெல், ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனை புரிந்துள்ளார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 19 முறை டக் அவுட்டாகியுள்ளார் மேக்ஸ்வெல்.
ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களரு, டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார் மேக்ஸ்வெல். 2013 முதல் மேக்ஸ்வெல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். அத்துடன் ஐபிஎல் போட்டிகளில் முக்கிய ஆல்ரவுண்டராகவும் ஜொலித்து வருகிறார். இதுவரை 130க்கும் மேற்பட்ட ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கும் மேக்ஸ்வெல் 2500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் ரன்குவிப்பு
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் பேட்ஸ்மேன்கள், குஜராத் பவுலர்களை அடித்து துவைத்து ரன்களை குவித்தனர்.
தொடக்கம் முதலே அதிரடியாக பேட் செய்த ஷ்ரேயாஸ், கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். 97 ரன்கள் அடித்த ஷ்ரேயாஸ் சதத்தை மிஸ் செய்தார். கடைசி 4 ஓவரில் ஷஷாங்க் சிங் ரன்வேட்டையில் ஈடுபட்டார். 16 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார்.
ஓபனராக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யாவும் நல்ல தொடக்கத்தை கொடுத்ததுடன் 47 ரன்கள் அடித்தார். உள்ளூர் மைதானத்தில் வைத்தே குஜராத் பவுலர்களுக்கு பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் பலத்த அடி கொடுத்துள்ளனர்.

டாபிக்ஸ்