ஐபிஎல் 2025: 18 ஆண்டு தவம்.. கிடைத்தது “ஈ சாலா கப்..” கண்ணீர் விட்ட கோலி! முதல் கோப்பையை தூக்கிய ஆர்சிபி
மிக பெரியஎதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்திய ஆர்சிபி முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. ஐபிஎல் தொடங்கிய 18வது சீசனில் ஆர்சிபி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் விராட் கோலி கண்ணீர் விட்டார்.

ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப்போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு (ஆர்சிபி) - பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. முதல் முறையாக ரெட் ஜெர்சி அணிந்த அணிகளான ஆர்சிபி, பிபிகேஎஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. ஆர்சிபி அணி 2016 சீசனுக்கு பிறகு தற்போது நான்காவது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 2014 சீசனுக்கு பிறகு இரண்டாவது முறையாக பைனலில் தகுதி பெற்றது. 2022 சீசனுக்கு பிறகு இந்த முறை புதிய அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் நிலை ஏற்பட்டது.
ஆர்சிபி ரன் குவிப்பு
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 43, பட்டிதார் 26, லிவிஸ்டன் 25 ரன்கள் எடுத்தனர்.
பஞ்சாப் பவுலர்களில் அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் 10 ஓவரில் 87 ரன்கள் அடித்த ஆர்சிபி, கடைசி 10 ஓவரில் 103 ரன்கள் குவித்தது. குறிப்பாக கடைசி 4 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்தபோதிலும், 5 விக்கெட்டுகளை இழந்தது.