ஐபிஎல் 2025: இந்த சீசன் முதல் சூப்பர் ஓவர்.. ரன் அவுட்டால் வீழ்ந்த ராஜஸ்தான்! இமாலய சிக்ஸருடன் டெல்லி த்ரில் வெற்றி
ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன்அவுட், பின்னர் சூப்பர் ஓவரில் இரண்டு ரன் அவுட் என டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து ரன் அவுட்டானது. இருப்பினு சூப்பர் ஓவரில் இமாலய சிக்ஸரை பறக்க விட்ட டெல்லி பேட்ஸ்மேன் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

இந்த சீசன் முதல் சூப்பர் ஓவர்.. ரன் அவுட்டால் வீழ்ந்த ராஜஸ்தான்! இமாலய சிக்ஸருடன் டெல்லி த்ரில் வெற்றி (AP)
ஐபிஎல் 2025 தொடரின் 32வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் டெல்லி கேபிடல்ஸ் 5 போட்டிகளில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருந்தது.
டெல்லி கேபிடல்ஸ் தனது முந்தைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முந்தைய போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக தோல்வியுற்றது.
இரு அணிகளும் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கும் திரும்பும் விதமாக இந்த போட்டி அமைந்தது. இந்த போட்டியில் இரு அணிகளும் முந்தைய போட்டியில் விளையாடிய அதே அணிகளுடன் களமிறங்கின.