ஐபிஎல் 2025: ஒரே ஓவரில் நடந்த டுவிஸ்ட்! மூன்று பந்துகள், மூன்று ரன்அவுட்.. டெல்லி வெற்றிக்கு SpeedBreaker போட்ட மும்பை
இந்த சீசனில் உள்ளூர் மைதானத்தில் விளையாடும் அணிகள் அதிகமாக தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிகழ்வு நான்கு தொடர் வெற்றிகளை பெற்றிருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் நிகழ்ந்துள்ளது. அடுத்தடுத்து மூன்று ரன் அவுட்களை எடுத்து மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 29வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி உள்ளூர் மைதானமான இங்கு இந்த சீசனில் நடைபெறும் முதல் போட்டியாக இது அமைந்தது.
இந்த போட்டி தொடங்கும் முன் டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றி, நான்கு தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலும் இருந்தது.
டெல்லி கேபிடல்ஸ் இன்னும் ஒரு தோல்வியை கூட பெறாத நிலையில், வலுவான அணியாக டாப் இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் கடந்த போட்டியில் களமிறங்கிய அதே கூட்டணியுடன் விளையாடியது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 205 ரன்கள் குவித்த நிலையில், இதை சேஸ் செய்த டெல்லி கேபிடல்ஸ் 193 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டாகியுள்ளது
டெல்லி கேபிடல்ஸ் சேஸிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் 19 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கருண் நாயர் 89, அபிஷேக் போரல் 33 ரன்கள் எடுத்தனர்.
மும்பை இந்தியன்ஸ் பவுலர்களில் கரண் ஷர்மா 3, மிட்செல் சாண்ட்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பும்ரா, தீபக் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
கருண் நாயர் அதிரடி
டெல்லி கேபிடன்ஸ் ஓபனரான மெக்குர்க், முதல் பந்திலேயே டக்அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து கருண் நாயர் இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்டார். ஓபனிங்கில் களமிறங்கிய அபிஷேக் போரல் - கருண் நாயர் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு நல்ல தொடக்கத்தையும், அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். டெல்லி கேபிடல்ஸ் பவர்ப்ளே ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது.
மும்பை பவுலர்களில் பந்து வீச்சை அசால்டாக டீல் செய்த கருண் நாயர் அடுத்தடுத்து பவுண்டரிகளாக அடித்து மிரட்டினார். 22 பந்துகளில் அரைசதமடித்த அவர், அதன் பின்னரும் அதிரடியை தொடர்ந்தார். விரைவாக ரன்களை குவித்த தேவைப்படும் ரன்ரேட்டையும் கட்டுக்குள் வைக்க செய்தார்.
40 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து கருண் நாயர், சாண்ட்னர் அற்புத பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். தனது இன்னிங்ஸில் 12 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடித்தார். ஓபனரான அபிஷேக் போரல் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி 33 ரன்கள் அடித்தார்.
திருப்பம் தந்த கரண் ஷர்மா
மும்பை இந்தியன்ஸ் அணியில் இம்பேக்ட் வீரர் ஸ்பின்னர் கரண் ஷர்மா களமிறக்கப்பட்டார். இவர் சிறப்பாக பேட் செய்து வந்த அபிஷேக் போரல், கேஎல் ராகுல், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்பம் தந்தார். கடைசி கட்டத்தி்ல அசுடோஷ் ஷர்மா 17, விப்ராஜ் நிகம் 14 என சிறிய கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருப்பினும் ஆட்டத்தின் 19வது ஓவரி அடுத்தடுத்த மூன்று பந்துகளில் டெல்லி பேட்ஸ்மேன்கள் ரன் அவுட்டாகி வெளியேற மும்பை அணி மூன்று தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியது. டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு கீழே இறங்கியது.
