ஐபிஎல் 2025: UnStoppable டெல்லி.. உள்ளூர் மைதானத்தில் முதல் போட்டி! வெற்றியை தடுக்க SpeedBreaker போடுமா மும்பை?
ஐபிஎல் 2025: இந்த சீசனில் நான்கு தொடர் வெற்றிகளுடன் UnStoppable பயணித்து வரும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் SpeedBreaker ஆக அமையுமா என்பது இன்று நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டியில் தெரியவரும்

ஐபிஎல் 2025 தொடரின் 29வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. டெல்லி உள்ளூர் மைதானமான இங்கு இந்த சீசனில் நடைபெறும் முதல் போட்டியாக இது அமைகிறது.
இந்த போட்டி தொடங்கு முன் டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றி, நான்கு தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது
டெல்லி கேபிடல்ஸ் தனது முந்தைய போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக வெற்றியை பெற்றது. மும்பை இந்தியன்ஸ் தனது முந்தைய போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராகவே விளையாடியுள்ளன.
டெல்லி கேபிடல்ஸ் இன்னும் ஒரு தோல்வியை கூட பெறாத நிலையில், வலுவான அணியாக டாப் இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஸ்டார் வீரர்கள்
டெல்லி கேபிடல்ஸ் அணியை பொறுத்தவரை டெல்லி அருண் ஜெட்லி மைதானம், விசாகப்பட்டினம் ஓய்.எஸ். ராஜசேகரரெட்டி மைதானம் என இரு உள்ளூர் மைதானங்கள் இந்த சீசனில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு உள்ளூர் போட்டிகளை விசாகபட்டினத்தில் விளையாடியிருக்கும் டெல்லி கேபிடல்ஸ், தற்போது டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் முதல் போட்டியில் களமிறங்க இருக்கிறது.
அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை கேஎல் ராகுல் உச்சகட்ட பார்மில் உள்ளார். இதுதவிர பின்வரிசையில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுடோஷ் ஷர்மா ஆகியோர் அதிரடியில் மிரட்டி வருகிறார்கள். அக்சர் படேல், விப்ராஜ் நிகம், டூ பிளெசிஸ், அபிஷேக் போரல் ஆகியோரும் நல்ல பங்களிப்பை அளித்து வருகிறார்கள். பவுலிங்கிலும் மிட்செல் ஸ்டார், முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை டாப் பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் பார்ம் இல்லாமல் உள்ளார்கள். ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா நல்ல நிலையில் உள்ளார்கள். பவுலிங்கில் போல்ட் சிறப்பாக செயல்படும் நிலையில், பும்ராவின் வருகை தன்னம்பிக்கை அளிக்கும் விஷயமாக உள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இதுவரை
இந்த இரு அணிகளும் 35 முறை இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் 19, டெல்லி கேபிடல்ஸ் 16 முறை வெற்றி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் மோதிக்கொண்ட கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
பிட்ச் நிலவரம்
பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளமாக டெல்லி மைதானம் இருந்துள்ளது. இருப்பினும் சரியான லென்தில் பவுலிங் செய்தால் பவுலர்களுக்கு உதவும் என கூறப்பட்டுள்ளது. ரன் வேட்டை மிக்க போட்டியை பார்க்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் உத்தேச அணி: ஃபாஃப் டு பிளெசிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், அபிஷேக் போரெல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, அக்சர் படேல் (கேப்டன்), விப்ராஜ் நிகாம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், மோஹித் சர்மா
மும்பை இந்தியன்ஸ் உத்தேச அணி: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், வில் ஜாக்ஸ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, வ்க்னேஷ் புதூர்
