ஐபிஎல் 2025: தொடரும் சோகம்.. டக் அவுட்டான ஜடேஜா, 1 ரன்னில் அவுட்டான தோனி.. 103 ரன்களில் சுருண்டது சிஎஸ்கே!
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 25-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியின் கேப்டன் பதவிக்கு திரும்பினார் தோனி.

ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி படுமோசமாக பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை எடுத்தது. 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கேகேஆர் விளையாடவுள்ளது. கொல்கத்தா அணியின் சுனில் நரேன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். மொயீன் அலி 1 விக்கெட்டை தூக்கினார். வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை அள்ளினார். ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வைபவுக்கு 1 விக்கெட் கிடைத்தது.
ரச்சின் ரவீந்திரா 4 ரன்கள், டெவன் கான்வே 12 ரன்கள், ராகுல் திரிபாதி 16 ரன்கள், அஸ்வின் 1 ரன், ஜடேஜா டக் அவுட், தீபக் ஹூடா டக் அவுட், தோனி 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். மிடில் ஆர்டரில் களம் புகுந்த விஜய் சங்கர் மட்டும் 29 ரன்கள் எடுத்தார். அவர் அந்த ஸ்கோரை அடிக்கவில்லை எனில் ஸ்கோர் இந்த அளவுக்குக் கூட வந்திருக்காது. தோனியும் தொடர்ந்து பேட்டிங்கில் ஜொலிக்காமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷிவம் துபே அவுட்டாகாமல் 31 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தார்.
தற்போது, ஐபிஎல் 2025 புள்ளிகள் அட்டவணையில் ஐந்து போட்டிகளில் நான்கு புள்ளிகளுடன் கே.கே.ஆர் ஆறாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் சென்னையை தளமாகக் கொண்ட சிஎஸ்கே ஐந்து போட்டிகளில் இருந்து இரண்டு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள சென்னை அணி, தோனி தலைமையில் மீண்டும் இன்று பேட்டிங்கில் சொதப்பியிருக்கிறது.
ரஹானே கூறியது என்ன?
டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, “நாங்கள் முதலில் பந்துவீசுவோம். கடந்த ஆட்டத்தில் இருந்து நிறைய நேர்மறையான விஷயங்கள் இருந்தன. ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடினோம். இது ஒவ்வொரு கேமையும் மேம்படுத்துவது பற்றியது. இது ஒரு நல்ல பிட்ச் போல் தெரிகிறது, அதிகம் மாறாது என நினைக்கிறேன். நாங்கள் நன்றாக பேட்டிங் செய்கிறோம், அதனால்தான் நாங்கள் முதலில் பந்துவீசி சேஸிங் செய்ய விரும்புகிறோம். எங்கள் அணியில் ஒரு மாற்றம் - ஸ்பென்சருக்குப் பதிலாக மொயீன் அலி வருகிறார்” என்றார் ரஹானே.
சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியது என்ன?
"நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். சில சந்தர்ப்பங்களில் நாங்கள் சேஸ் செய்ய முயற்சித்தோம், நாங்கள் உணர்ந்தது என்னவென்றால், விக்கெட் சற்று மெதுவாகிறது, எனவே நீங்கள் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெறவில்லை என்றால், மிடில் ஆர்டர் அழுத்தத்தில் உள்ளது. ருதுராஜ் முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவர் மிகவும் நல்ல பேட்ஸ்மேன், பந்தை நன்றாக டைமிங் பார்த்து அடிக்கும் ஒருவர். இந்த கேமில் ஜெயிப்பது முக்கியமானது, ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. நாங்கள் சில போட்டிகளில் தோல்வியடைந்துள்ளோம், இப்போது அடிப்படைகளை சரியாகச் செய்வது முக்கியம், ஓரிரு ஆட்டங்களில் நாங்கள் பெரிய வித்தியாசத்தில் தோற்றோம், ருதுராஜுக்கு பதிலாக திரிபாதியும், முகேஷுக்கு பதிலாக அன்சுல் கம்போஜும் எங்களிடம் உள்ள பிளேயிங் லெவன் மாற்றங்கள் ஆகும்" என்று தோனி கூறினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: குயிண்டன் டி காக், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், மொயீன் அலி, ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.
சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சிவம் துபே, எம்.எஸ்.தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, அன்சுல் கம்போஜ், கலீல் அகமது.
