ஐபிஎல் 2025: ஷ்ரேயாஸ், ஸ்டோய்னிஸ் அதிரடி.. டெல்லிக்கு சவால் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: ஷ்ரேயாஸ், ஸ்டோய்னிஸ் அதிரடி.. டெல்லிக்கு சவால் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் 2025: ஷ்ரேயாஸ், ஸ்டோய்னிஸ் அதிரடி.. டெல்லிக்கு சவால் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 24, 2025 09:44 PM IST

ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதமடித்த நிலையில், கடைசி கட்ட ஓவர்களில் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்தி 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

ஐபிஎல் 2025: ஷரேயாஸ், ஸ்டோய்னிஸ் அதிரடி.. டெல்லிக்கு சவால் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் 2025: ஷரேயாஸ், ஸ்டோய்னிஸ் அதிரடி.. டெல்லிக்கு சவால் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ் (REUTERS)

பஞ்சாப் கிங்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டியாக இது அமைந்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் அணியில் அபிஷேக் போரலுக்கு பதிலாக செடிகுல்லா அடல் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் டூ பிளெசிஸ் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 53, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 44, ஜோஷ் இங்கிலீஸ் 32, பிரப்சிம்ரன் சிங் 28 ரன்கள் அடித்துள்ளனர்.

டெல்லி பவுலர்களில் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகேஷ் குமார் ஒரு விக்கெட் எடுத்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்

பஞ்சாப் கிங்ஸ் ஓபனர்களில் பிரியான்ஷ் ஆர்யா 6 ரன்னில் விரைவாக அவுட்டானார். மற்றொரு ஓபனரான பிரப்சிம்ரன் சிங் 18 பந்துகளில் 28 ரன்கள் விரைவாக அடித்து வெளியேறினார்.

இதற்கிடையே பவுண்டரி, சிக்ஸர் என வானவேடிக்கை காட்டிய ஜோஷ் இங்கிலீஸ் 12 பந்துகளில் 32 ரன்கள் என அதிரடி வேட்டை காட்டிவிட்டு அவுட்டானார். பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் கிங்ஸ் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது.

நான்காவது பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் அடிக்க வேண்டிய பந்தில் பவுண்டரி, சிக்ஸர் என விரட்டினார். 33 பந்தில் அரைசதமடித்த ஷ்ரேயாஸ் ஐயர் தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் அடித்துவிட்டு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஸ்டோய்னிஸ் அதிரடி

மிடில் ஆர்டரில் பேட் செய்த நேகல் வாதிரா 16, ஷஷாங்க் சிங் 11 ரன்கள் அடித்து பெரிதாக பங்களிப்பு அளிக்கவில்லை. இவர்களை தொடர்ந்து பேட் செய்த மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடி கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். 4 சிக்ஸர்களை பறக்க விட்டு வான வேடிக்கை காட்டிய ஸ்டோய்னிஸ் 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை நாட் அவுட்டாக இருந்தார்.

டெல்லி கேபிடல்ஸ் பவுலர்களில் அனைத்து பவுலர்களும் 30 ரன்கள் மேல் விட்டுக்கொடுத்தனர். முஸ்தபிசுர் ரஹ்மான் 4 ஓவர்களில் 33 ரன்கள் என குறைவாக விட்டுகொடுத்தார். 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஹ்மான் 8 டாட் பந்துகளை வீசினார். அதிகபட்சமாக முகேஷ் குமார் 9 டாட் பந்துகளை வீசியபோதிலும், 4 ஓவர்களில் 49 ரன்கள் என அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தார்.