ஐபிஎல் 2025: வாய்ப்பை கைநழுவவிட்ட டெல்லி! பேட்டிங், பவுலிங்கில் முழு ஆதிக்கம்.. 11வது முறையாக ப்ளேஆஃப்பில் மும்பை
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: வாய்ப்பை கைநழுவவிட்ட டெல்லி! பேட்டிங், பவுலிங்கில் முழு ஆதிக்கம்.. 11வது முறையாக ப்ளேஆஃப்பில் மும்பை

ஐபிஎல் 2025: வாய்ப்பை கைநழுவவிட்ட டெல்லி! பேட்டிங், பவுலிங்கில் முழு ஆதிக்கம்.. 11வது முறையாக ப்ளேஆஃப்பில் மும்பை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 21, 2025 11:54 PM IST

ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்கும் விதமாக இருந்த முக்கிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங், பவுலிங் என முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேபிடல்ஸ் தோல்வியை தழுவி ப்ளேஆஃப் வாய்ப்பை கைநழுவிவிட்டது.

ஐபிஎல் 2025: வாய்ப்பை கைநழுவிய டெல்லி! பேட்டிங், பவுலிங்கில் முழு ஆதிக்கம்.. 11வது முறையாக ப்ளேஆஃப்பில் மும்பை
ஐபிஎல் 2025: வாய்ப்பை கைநழுவிய டெல்லி! பேட்டிங், பவுலிங்கில் முழு ஆதிக்கம்.. 11வது முறையாக ப்ளேஆஃப்பில் மும்பை (REUTERS)

இந்த போட்டி தொடங்கும் முன் மும்பை இந்தியன்ஸ் 12 போட்டிகளில் 7 வெற்றி, 5 தோல்வி என 14 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்திலும், டெல்லி கேபிடல்ஸ் அணி 12 போட்டிகளில் 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு போட்டி முடிவு இல்லை உள்பட 13 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்திலும் இருந்தது.

மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் தங்களது முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் மோதிலில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் போஷ்க்கு பதிலாக சாண்டனர் சேர்க்கப்பட்டிருந்தார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் நடராஜன், அக்சர் படேலுக்கு பதிலாக மாதவ் திவாரி, துஷ்மந்தா சமீரா ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். அக்சர் படேல் விளையாடாத நிலையில் டூ பிளெசிஸ் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டன்சி செய்தார்.

இதையடுத்து முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 180 ரன்களை குவித்த நிலையில், இந்த ஸ்கோரை சேஸ் செய்த டெல்லி கேபிடல்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அத்துடன் ப்ளேஆஃப் வாய்ப்பையும் கைநழுவவிட்டது.

டெல்லி கேபிடல்ஸ் சேஸிங்

முன்னதாக, டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் டூ பிளெசிஸ் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் சூர்யகுமார் யாதவ், நமன் திர் அதிரடியால் 180 ரன்கள் குவித்தது. இந்த ஸ்கோரை விரட்டிய டெல்லி கேபிடல்ஸ் 18.2 ஓவரில் 121 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 11வது முறையாக ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற்றுள்ளது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 39, விப்ராஜ் நிகம் 20, அசுடோஷ் ஷர்மா 18 ரன்கள் அடித்தனர். அந்த அணியில் மொத்தம் 4 பேர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ஸ்கோர் செய்தனர்.

மும்பை பவுலர்களில் பும்ரா, சாண்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். போல்ட், தீபிக் சஹார், விக் ஜாக்ஸ், கரண் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்

181 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மோசமான தொடக்கம் அமைந்தது. ஒபனர்களில் கேஎல் ராகுல் 11, டூ பிளெசிஸ் 6, அடுத்து பேட் செய்த அபிஷேக் போரல் 6 ரன்கள் என பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்தனர் பவர்ப்ளே முடிவில் டெல்லி கேபிடல்ஸ் 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்தது.

இதன் பின்னர் விக்கெட் சரிவை தடுக்கும் விதமாக சமீர் ரிஸ்வி - விப்ராஜ் நிகம் ஆகியோர் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் விப்ராஜ் நிகம் அவுட்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன்னில் வெளியேறினார்.

களத்தில் இருந்த சமீர் ரிஸ்வி பொறுமையாக பேட் செய்து ரன்களை குவித்து வந்தார். இருப்பினும் தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்தது. ரிஸ்வி - அசுடோஷ் ஷர்மா இணைந்து 48 ரன்கள் சேர்த்தனர். இருப்பினும் ரிஸ்வி 35 பந்துகளில் 39, அசுடோஷ் ஷர்மா 16 பந்துகளில் 18 என அடுத்தடுத்து அவுட்டானார்கள். இவர்களை தொடர்ந்து அடித்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில் டெல்லியின் தோல்வி உறுதியானது.

பும்ரா, சாண்டர்னர் அபாரம்

மும்பை பவுலர்கள் சிறப்பாக பந்து வீசிய நிலையில், ஸ்பின்னர் சாண்டர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் டெல்லி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

சாண்ட்னர் 4 ஓவரில் 11 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிகபட்சமாக 16 டாட் பந்துகளை வீசினார். ஜஸ்ப்ரீத் பும்ரா 3.2 ஓவரில் 12 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளுடன், 12 டாட் பந்துகளை வீசினார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே டெல்லி கேபிடல்ஸ் ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் மோசமான பேட்டிங்கால் தோல்வியை தழுவியதோடு ப்ளேஆஃப் வாய்ப்பையும் நழுவவிட்டது.

கடந்த 2024 ஐபிஎல் தொடரில் 10வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ், இந்த சீசனில் கம்பேக் கொடுத்து ப்ளேஆஃப் சுற்றுக்கு நான்காவது அணியாக முன்னேறியுள்ளது.

ப்ளேஆஃப் சுற்று போட்டிகள் மே 29ஆம் தேதி நடைபெர இருக்கும் நிலையில், இதற்கிடையே நடைபெற இருக்கும் போட்டிகளில் ப்ளேஐஆஃப்புக்கு தகுதி பெற்றிருக்கும் டாப் 4 அணிகளில் டாப் 2 இடத்தை பிடிக்கப்போவது யார் என்பதற்கான போட்டியாக அமையக்கூடும்