ஐபிஎல் 2025: நமன் திர், சூர்யகுமார் யாதவ் அதிரடி.. 2 ஓவரில் மட்டும் 48 ரன்கள்! மும்பை இந்தியன்ஸ் சவால் இலக்கு
ஆட்டத்தின் 18 ஓவர் வரை டெல்லி கேபிடல்ஸ் அணி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனால் கடைசி இரண்டு ஓவரில் மட்டும் நமன் திர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் 48 ரன்களை குவித்துள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 63வது போட்டி மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ப்ளேஆஃப் ரேஸுக்கான முக்கியமான போட்டியாக அமைந்த இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்கும்.
இந்த போட்டி தொடங்கும் முன் மும்பை இந்தியன்ஸ் 12 போட்டிகளில் 7 வெற்றி, 5 தோல்வி என 14 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி 12 போட்டிகளில் 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு போட்டி முடிவு இல்லை உள்பட 13 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. டெல்லி கேபிடல்ஸ் அணியும் தனது முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிராக தோல்வியுற்றது. இரு அணிகளும் குஜராத் அணிக்கு எதிராக அடி வாங்கியிருக்கும் நிலையில், இந்த போட்டியில் வென்றால் மட்டுமே ப்ளேஆஃப்பில் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் களமிறங்கியுள்ளது.
