ஐபிஎல் 2025: ஒன் மேன் ஷோ! சதமடித்த கேஎல் ராகுல்.. குஜராத் பவுலர்களுக்கு எதிராக அதிரடி.. டெல்லி கேபிடல்ஸ் ரன் குவிப்பு
குஜராத் பவுலர்களுக்கு எதிராக நிதானமும், அதிரடியும் கலந்த இன்னிங்ஸை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் சதமடித்ததுடன், ஒன் மேன் ஷோ காட்டினார். டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவரில் 199 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 60வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருக்கிறது. இந்த போட்டி தொடங்கும் முன் டெல்லி கேபிடல்ஸ் 11 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்விகள், ஒரு போட்டி முடிவு இல்லை உள்பட 13 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி 11 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளுக்கும் முடிவு கிடைக்கவில்லை. கடைசியாக ஏப்ரல் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தான் டெல்லி கேபிடல்ஸ் முழுமையாக விளையாடிய நிலையில், அதில் தோல்வியை தழுவியது. குஜராத் டைட்டன்ஸ் தனது முந்தைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்றது.
இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் அணிகளுக்கு இடையிலான முதல் மோதல் அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்ற நிலையில், டெல்லி அணி பழிதீர்க்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
