ஐபிஎல் 2025: மழைக்கு மத்தியில் ரன்கள்.. விக்கெட்டுகள்.. திருப்பங்கள் நிறைந்த போட்டியில் மும்பையை வீழ்த்திய குஜராத்
இரண்டு முறை மழை குறுக்கீடு காரணமாக சில நிமிடங்கள் தடைப்பட்ட போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் ரன்குவிப்பில் ஈடுபட, மும்பை இந்தியன்ஸ் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி என திருப்பங்கள் ஏற்பட்டன. இருப்பினும் ஆட்டத்தின் கடைசி பந்தில் மும்பையை வீழ்த்திய குஜராத் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2025 தொடரின் 56வது போட்டி மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்ன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 10 போட்டிகளில் 7 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திலும் உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று டாப் 2 இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் களமிறங்கின. இந்த சீசனில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் மோதலில் குஜராத் வெற்றி பெற்றது. எனவே மும்பை இந்தியன்ஸ் இந்த முறை குஜராத்தை பழிதீர்க்கும் முனைப்பில் விளையாடியது.
மும்பை இந்தியன்ஸ் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியது. குஜராத் அணியில் அர்ஷத் கான், ககிசோ ரபாடா ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ்155 ரன்கள் எடுத்த நிலையில், இந்த ஸ்கோரை சேஸ் செய்த குஜராத் 147 ரன்கள் அடித்து DLS விதிமுறைப்படி வெற்றி பெற்றது.
குஜராத் டைட்டன்ஸ் சேஸிங்
முன்னதாக, டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 155 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து, DLS விதிமுறைப்படி வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக சுப்மன் கில் 43, ஜோஸ் பட்லர் 30, ருதர்போர்டு 28 ரன்கள் எடுத்தனர். மும்பை பவுலர்களில் போல்ட், பும்ரா, அஸ்வனி குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தீபக் சஹார் ஒரு விக்கெட் எடுத்தார்.
நல்ல தொடக்கம்
குஜராத் அணியின் ஓபனரான பார்மில் இருந்து வரும் சாய் சுதர்சன் 5 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சுப்மன் கில் - ஜோஸ் பட்லர் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர்.
அதிரடியும், நிதானமும் கலந்து கில், பட்லர் ஆகியோர் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். வழக்கமாக அதிரடியாக பேட் செய்யக்கூடிய பட்லர், நிதானமாக பேட் செய்த நிலையில் 27 பந்துகளில் 30 ரன்கள் அடித்து அவுட்டானார்.
மழையால் ஏற்பட்ட திருப்பம்
ஆட்டத்தின் 14 ஓவர் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது குஜராத் அணி DLS விதிமுறைப்படி 8 ரன்கள் அதிகமாக இருந்தது. இதையடுத்து 30 நிமிடங்கள் கழித்து ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
அப்போது ஆட்டத்தின் 15வது ஓவரில், மெதுவான இன்னிங்ஸை வெளிப்படுத்தி வந்த கில் 46 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் கிளீன் போல்ட் ஆனார். இதன் பின்னர் இம்பேக்ட் வீரராக பேட் செய்த வந்து ரன்குவிப்பில் ஈடுபட்ட வந்த ருதர்போர்டு 28, ஷாருக்கான் 6, ரஷித் கான் 2 என அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை குஜராத் அணி இழந்த நிலையில் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது.
குஜராத் அணியின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டம் மழைக்கு பின்னர் மும்பை பக்கம் திரும்பியது. அப்போது 18 ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 132 என இருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இந்த நேரத்தில் DLS விதிமுறைப்படி மும்பை இந்தியன்ஸ் 5 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
குஜராத் வெற்றி
இதைத்தொடர்ந்து மழை நின்ற பிறகு, மீண்டும் 30 நிமிடங்கள் கழித்து போட்டி தொடங்கப்பட்டது. அப்போது புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி குஜராத் ஒரு ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த ஓவரை தீபக் சஹார் பவுலிங் செய்ய, முதல் பந்தை எதிர்கொண்ட திவாடியா பவுண்டரி அடிக்க, மூன்றாவது பந்தில் ஸ்டிரைக்கில் இருந்த கோட்ஸி மிக பெரிய சிக்ஸரை பறக்கவிட்டார்.
ஓவரின் 5வது பந்தில் கோட்ஸி அவுட்டாக ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றி கொண்டது. இருப்பினும் கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட அதை அடித்த அர்ஷத் கான் அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இந்த வெற்றிக்கு பின்னர் குஜராத் டைட்டன்ஸ் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கும், மும்பை இந்தியன்ஸ் நான்காவது இடத்துக்கும் சென்றது
மும்பை பவுலர்களில் சிறப்பாக பவுலிங் செய்த 4 ஓவரில் 19 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் 15 டாட் பந்துகளை வீசினார். இதேபோல் ட்ரெண்ட் போல்ட் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள், 11 டாட் பந்துகளை வீசினார்.
