தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  India Vs Australia: சதுராட்டம் ஆடிய ரோஹித்.. ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபாரவெற்றி!

India vs Australia: சதுராட்டம் ஆடிய ரோஹித்.. ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபாரவெற்றி!

Marimuthu M HT Tamil
Jun 25, 2024 12:14 AM IST

India vs Australia: சதுராட்டம் ஆடிய ரோஹித், 41 பந்துகளில் 92 ரன்கள் விளாசி ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

India vs Australia: சதுராட்டம் ஆடிய ரோஹித்.. ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபாரவெற்றி!
India vs Australia: சதுராட்டம் ஆடிய ரோஹித்.. ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபாரவெற்றி! (Surjeet Yadav)

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி:

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில், இன்றைய 51ஆவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இது கிராஸ் இஸ்லெட் என்னும் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் - விராட் கோலியும் களமிறங்கினர். 1.4 ஓவரில் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஹஸில்வுட் பந்தில் அவுட்டானார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால் ஹசில்வுட்டின் பவுலிங்கில் இந்தியாவுக்கு பிரச்னை வரலாம் என நினைத்தபோது, ரோஹித் சர்மா அதை மாற்றியமைத்தார். அவர் 19 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் குறுகிய நேரத்தில் அதிவேக அரை சதம் கடந்த வீரர் என்னும் சாதனையைப் படைத்தார், ரோஹித் சர்மா.

அதன்பின் வந்த ரிஷப் பந்த் 15 ரன்கள் எடுத்து, ஸ்டோனிஸ் பந்தில், டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா, 41 ரன்களுக்கு 92 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டார்க்கின் பந்தில் கிளீன் போல்டானார்.

நான்காவதாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், 31 ரன்கள் எடுத்தபோது, மீண்டும் ஸ்டார்க்கின் பந்தில், வடேயிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதனால் இந்திய அணி லேசாக சரிவைச் சந்தித்தது.

அதன்பின் களமிறங்கிய ஷிவம் துபே பொறுப்புடன் ஆடினார். அவருக்கு பார்ட்னர்ஷிப்பாக ஹர்திக் பாண்டியா இருந்தார். ஷிவம் துபே 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தபோது ஸ்டோனிஸ் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

அவருக்குப் பின், ரவீந்திர ஜடேஜா வந்தார். ஹர்திக் பாண்டியாவும் ரவீந்திர ஜடேஜாவும் 20 ஓவர்கள் வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதில் பாண்டியா 27 ரன்களும், ஜடேஜா 9 ரன்னும் எடுத்திருந்தார். இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு இந்தியா 205 ரன்களை எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியின் சார்பில், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், ஹஸில்வுட் ஒரு விக்கெட்டையும், ஸ்டோனிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இரண்டாவதாக சேஸிங்கில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய அணி:

அதனைத் தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக, டேவிட் வார்னரும் டிராவிஸ் ஹெட்டும் களமிறங்கினர். டேவிட் வார்னரை இரட்டை இலக்க ரன்கள் எடுக்கவிடாமல், இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 6 ரன்களில் அவுட்டாக்கினார். டிராவிஸ் ஹெட் நிதானமாக ஆடினார். அவர் இந்திய பவுலர்களின் பந்தினை சிதறிடித்தார். 43 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தபோது, பும்ராவின் பந்தில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து டிராவிஸ் ஹெட் அவுட்டானார்.

அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் களமிறங்கி அதிரடி காட்டினார். அவர் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தபோது, குல்தீப் யாதவ் பந்தில், அக்சர் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் குல்தீப் யாதவ் பந்தில் 20 ரன்கள் எடுத்தபோது கிளீன் போல்டனார். அடுத்தடுத்து வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். ஸ்டோனிஸ் 2 ரன்னும், டிம் டேவிட் 15 ரன்களும், மேத்யூ வாடே ஒரு ரன்னும் எடுத்தும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதியாக பட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் இணை மட்டும் நின்றது. இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை 181 ரன்கள் எட்டிப்பிடிக்க உதவினர். பட் கம்மின்ஸ் 11 ரன்களும் ஸ்டார்க் 4 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதன்மூலம், இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றிபெற்றது.

இந்திய அணியின் சார்பாக அர்ஷ்தீப் சிங் 37 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். பும்ரா ஒரு விக்கெட்டும், அக்ஸர் பட்டேல் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 24 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார்.

41 பந்துகளில் 92 ரன்களை எடுத்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்றைய ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

WhatsApp channel

டாபிக்ஸ்