தமிழ் செய்திகள்  /  Cricket  /  Indian Premier League First Season Top Scorers List Here

IPL First Season top scorers list: ஐபிஎல் முதல் சீசனில் அதிக ஸ்கோர் பதிவு செய்த இந்திய பிளேயர் யார் தெரியுமா?

Manigandan K T HT Tamil
Mar 06, 2024 06:00 AM IST

IPL 2008 Season-இல் அதிக ஸ்கோர் விளாசிய டாப் 10 வீரர்கள் லிஸ்ட்டைப் பார்ப்போம். முதல் சீசனில் பஞ்சாப் அணியின் ஷான் மார்ஷ் 11 ஆட்டங்களில் விளையாடி 616 ரன்களை விளாசினார்.

ஐபிஎல் கிரிக்கெட்டை கண்டு ரசிக்கும் ரசிகர்கள் (file photo)
ஐபிஎல் கிரிக்கெட்டை கண்டு ரசிக்கும் ரசிகர்கள் (file photo) (HT)

ட்ரெண்டிங் செய்திகள்

ஐபிஎல் உலகிலேயே மிகவும் பிரபலமான கிரிக்கெட் லீக் ஆகும். 2014 இல், அனைத்து விளையாட்டு லீக்குகளிலும் சராசரி வருகையால் ஆறாவது இடத்தைப் பிடித்தது. 2010 இல், ஐபிஎல் யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட முதல் விளையாட்டு நிகழ்வானது. ஐபிஎல் கிரிக்கெட்டைக் காண ரசிகர்கள் தவம் கிடப்பார்கள் என்றால் அது மிகையல்ல. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கிரிக்கெட் ரசிகர்கள் டிவி முன்னால் அமர்ந்து முழு போட்டியை ரசிப்பார்கள்.

இதுவெறும் கிரிக்கெட் போட்டி அல்ல, இதுவொரு திருவிழா. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஐபிஎல் ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த அணியின் வீரர்கள் சரியாக விளையாடினால் கொண்டாடவும், சரியாக விளையாடவில்லை என்றால் உரிமையுடன் திட்டவும் செய்வார்கள்.

அந்த அளவுக்கு அவர்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போயிருக்கும் இந்த ஐபிஎல். இதுவரை 16 சீசன் ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது. நடப்பு சாம்பியனாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. குஜராத் ஜெயன்ட்ஸ் ஒரு முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறது. 2008ம் ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்ட ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கியது. அதற்கு அடுத்த வருடம் டெக்கான் சார்ஜஸ் அணி ஜெயித்தது.

தற்போது மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 10 அணிகள் விளையாடவுள்ளன.

முதல் ஐபிஎல் சீசனில் அதிக ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் யார் என பார்ப்போம்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் அதிரடி வீரர் கவுதம் கம்பீர் தான் அந்த வீரர். அவர் அந்த சீசனில் 14 ஆட்டங்களில் விளையாடி 534 ரன்கள் விளாசினார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 86. பேட்டிங் ஆவரேஜ் 41.07 வைத்திருந்தார். அவர் மொத்தம் 379 பந்துகளை எதிர்கொண்டு 534 ரன்களை குவித்தார். ஸ்டிரைக் ரேட் 140.89 ஆக இருந்தது. 5 அரை சதங்களை விளாசிய கம்பீர், 68 ஃபோர்ஸ், 8 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

அந்த சீசனில் அதிக ஸ்கோர் விளாசிய டாப் 10 வீரர்கள் லிஸ்ட்டைப் பார்ப்போம். முதல் சீசனில் பஞ்சாப் அணியின் ஷான் மார்ஷ் 11 ஆட்டங்களில் விளையாடி 616 ரன்களை விளாசினார். இவர் தான் டாப் ஸ்கோரர். இவர் ஆஸி.,யைச் சேர்ந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பீர்
கம்பீர் (HT)

அடுத்த இடத்தில்தான் கம்பீர் இடம்பிடித்திருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய இலங்கையைச் சேர்ந்த சனத் ஜெயசூரியா மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடி 518 ரன்களை குவித்து 3வது இடத்தைப் பிடித்தார்.

ராஜஸ்தானை சாம்பியனாக்கிய ஆஸி., வீரர் ஷேன் வாட்சன் 15 ஆட்டங்களில் ஆடி மொத்தம் 472 ரன்களும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ராஜஸ்தானுக்காக ஆடிய கிரெயம் ஸ்மித் 441 ரன்களும் விளாசி அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

பஞ்சாப் அணிக்காக ஆடம் கில்கிறிஸ்ட் 436 ரன்கள், ராஜஸ்தான் அணிக்காக யூசஃப் பதான் 435 ரன்கள், சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா 421 ரன்கள், சிஎஸ்கே அணிக்காக எம்.எஸ்.தோனி 16 ஆட்டங்களில் விளையாடி 414 ரன்கள் அடித்து டாப் 10 பட்டியலில் இடம்பிடித்தனர்.

10வது இடத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய வீரேந்தர் சேவாக் 406 ரன்கள் விளாசினார். 2008 சீசனில் அதிக ஸ்கோர் குவித்து இறுதியில் ஆரஞ்ச் கேப்பை வசப்படுத்தியது ஷான் மார்ஷ் ஆவார்.

IPL_Entry_Point