‘நீக்கப்படவில்லை.. விலகினேன்.. முடிவெடுக்கச் சொன்னார்கள்..’ மனம் திறந்தார் ரோஹித் சர்மா!
ரோஹித் சர்மா தனது ஓய்வு குறித்த ஊகங்களை நிராகரித்து, இந்திய அணியின் கேப்டனாகத் தொடர்வேன் என்று கூறியுள்ளார். சிட்னி டெஸ்டில் அவர் எடுத்த முடிவு பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார்.
‘நான் ஓய்வு பெறவில்லை; இந்திய அணியின் கேப்டன் பதவியையும் விட்டுக்கொடுக்கவில்லை,’ எ்ன்று தெளிவுபடுத்தியிருக்கிறார் ரோஹித் சர்மா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்டில் விளையாடவில்லை என்ற அவரது முடிவு கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு நாள் கழித்து, ‘தான் ஓய்வெடுக்கவில்லை அல்லது விலகவில்லை… நிச்சயமாக நீக்கப்படவில்லை,’ என்பதை உறுதிப்படுத்தி இந்த விஷயத்தில் தனது மௌனத்தை உடைத்தார் ரோஹித் சர்மா. தனது சூழ்நிலையை விவரிக்க "விலகினேன்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார் ரோஹித்.
"நான் விலகினேன், நான் சொல்வது இதுதான்," என்று சிட்னி டெஸ்டின் 2வது நாள் மதிய உணவு இடைவேளையின் போது ரோஹித் சமார், ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.
ஐந்தாவது டெஸ்டில் விளையாடாமல் இருக்க ஏன் முடிவு செய்தார் என்பதையும், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கரிடம் தனது சிந்தனைச் செயல்முறை குறித்து எவ்வாறு தெரிவித்தார் என்பதையும் இந்திய கேப்டன் தெளிவாக விளக்கினார்.
தெளிவுபடுத்திய ரோஹித் சர்மா
"நான் பயிற்சியாளரிடம் மற்றும் தேர்வாளர்களிடம் பேசியது என்னவென்றால், நான் ரன்கள் எடுக்கவில்லை, ஃபார்மில் உள்ள வீரர்கள் எங்களுக்குத் தேவை. நீண்ட காலமாக ஃபார்மில் இல்லாத வீரர்களை எடுத்துச் செல்ல முடியாது என்கிற எனது எண்ணங்களைப் பயிற்சியாளரிடமும் தேர்வாளரிடமும் தெரிவிப்பது எனது கடமையாகும் என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் நீண்ட காலமாக விளையாடுகிறீர்கள், நீங்கள் முடிவெடுங்கள்' என்று கூறினார்கள். இது ஒரு கடினமான முடிவு, ஆனால் அணியின் நலனுக்காக அணியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சரியான முடிவு இது. சிட்னிக்கு வந்த பிறகு நான் இந்த முடிவை எடுத்தேன். எங்களுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே கிடைத்தன, ஒன்று புத்தாண்டு, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தேர்வாளர்களிடம் இதைப் பற்றிச் சொல்ல விரும்பவில்லை. நான் நிறைய முயற்சித்தேன், ஆனால் எதுவும் நடக்கவில்லை, அதனால் நான் விலகுவது முக்கியம்," என்று முடிவு செய்ததாக அவர் பேட்டியில் கூறினார்.
மூன்று டெஸ்டுகளில் ஐந்து இன்னிங்ஸ்களில் 31 ரன்கள் எடுத்த பிறகு ரோஹித் இந்த முடிவை எடுத்தார்.
T20 உலகக் கோப்பையை வென்ற உச்சத்தில் இருந்து, ரோஹித்தின் ஃபார்ம், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில், சரிவடைந்துள்ளது. அனுபவம் வாய்ந்த வலது கை பேட்ஸ்மேன் தனது கடைசி எட்டு டெஸ்டுகளில் 10.9 சராசரியில் 164 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2024ம் ஆண்டும் ரோஹித்துக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான ஆண்டாக மாறியது, அங்கு அவரது சராசரி 24.76 ஆகக் குறைந்தது.
இருப்பினும், இப்போது எந்த வடிவத்திலிருந்தும் ஓய்வு பெற திட்டமில்லை என்று ரோஹித் சர்மா உறுதிப்படுத்தினார். உண்மையில், ரன்கள் எடுப்பதன் மூலம் பேட்டிங்கில் மீண்டும் வருவதற்குத் அவர் தயாராகி வருகிறார்.
‘நான் எங்கும் போகவில்லை’
"ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவு இல்லை. நான் (கேப்டனாக) விலகப் போவதில்லை. இந்த டெஸ்டில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் ஏனென்றால் நான் போதுமான ரன்கள் எடுக்கவில்லை. இரண்டு மாதங்கள் அல்லது ஐந்து மாதங்களுக்குப் பிறகு நான் ரன்கள் எடுக்க மாட்டேன் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இதுபோன்ற விஷயங்கள் பல முறை நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதே நேரத்தில், நான் யதார்த்தமாகவும் இருக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் ஜதின் சப்ரு அவருக்கு நன்றி தெரிவித்து, அவரது தன்னலமற்ற செயலுக்காக உணர்ச்சிபூர்வமான விடைபெறுதலை வழங்கியபோது, ரோஹித், "நான் எங்கும் போகவில்லை," என்றுக் கூறி, சப்ரு மற்றும் இர்ஃபான் பதானை சிரிக்க வைத்தார்.
பும்ராவுடன் அரட்டையடித்த ரோஹித்
ரோஹித் இந்தத் தொடரின் தீர்க்கமான போட்டியில் இருந்து விலகியிருக்கலாம், ஆனால் அவர் எல்லா வகையிலும் இந்திய அணியின் தலைவராகத் தொடர்கிறார். 2வது நாள் காலை அமர்வின் குளிர்பான இடைவேளையின் போது ரோஹித் மைதானத்திற்குள் நுழைந்து, தற்காலிக கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் ஆகியோருடன் நீண்ட நேரம் அரட்டையடித்தார். சனிக்கிழமை விளையாட்டின் முதல் மணி நேரத்தில் முகமது சிராஜ் மற்றும் பும்ரா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை டெஸ்ட் போட்டியில் மீண்டும் கொண்டு வந்த பிறகு இது நடந்தது.
ரிசர்வ் வீரரின் பிப்பை அணிந்த ரோஹித் மைதானத்திற்குள் நுழைந்து பும்ரா மற்றும் பந்த் ஆகியோருடன் நீண்ட, உற்சாகமான அரட்டையடித்தார்.