India vs South Africa: யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்.. சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது இந்தியா!
India vs South Africa: U19 மகளிர் டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே மோதல் பரபரப்பாக இருந்தது. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 82 ரன்களில் சரணடைந்தது.

India vs South Africa: ஐசிசி யு-19 மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டில் ஃபைனலில் இந்திய மகளிர் யு-19 அணி, தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது. 11.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி அடைந்தது. இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது. தொடர்ந்து 2வது முறையாக யு-19 மகளிர் உலகக் கோப்பை டி20 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது இந்திய மகளிர் அணி. வெற்றி பெற்ற அணிக்கு ஐசிசி தலைவர் ஜெய் ஷா கோப்பையை வழங்கி சிறப்பித்தார்.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்களை மட்டுமே எடுத்தது. 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது இந்திய யு-19 மகளிர்.
ஓபனிங்கில் இறங்கிய கமாலினி 8 ரன்களில் ஆட்டமிழக்க, த்ரிஷாவும், சனிகாவும் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். த்ரிஷா 44 ரன்களும், சனிகா 26 ரன்களும் விளாசினர்.
பேட்டிங், பந்துவீச்சில் கலக்கிய த்ரிஷா
பந்துவீச்சைப் பொறுத்தவரை த்ரிஷா, சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை அள்ளினார்.
முன்னதாக, அரையிறுதியில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்திலும், இந்திய வீழ்த்தியது. வைஷ்ணவி சர்மா, ஜி கமாலினி மற்றும் கோங்காடி த்ரிஷா ஆகியோர் இந்த ஆண்டு யு 19 மகளிர் டி 20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக தனித்துவமான செயல்திறனை வெளிப்படுத்தினர்.
இந்தியா இதுவரை விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணி 8 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. பைனலில் தோல்வியைத் தழுவி ரன்னர்-அப் ஆனது.
இந்தியா: நிக்கி பிரசாத் (கேப்டன்), சனிகா சால்கே, த்ரிஷா, கமாலினி ஜி, பாவிகா அஹிரே, ஈஸ்வரி அவாசரே, மிதிலா வினோத், ஜோஷிதா, சோனம் யாதவ், பருணிகா சிசோடியா, கேசரி திரிதி, ஆயுஷி சுக்லா, ஆனந்திதா கிஷோர், எம்.டி ஷப்னம், வைஷ்ணவி சர்மா.
தென் ஆப்பிரிக்கா: ஜெம்மா போத்தா, சிமோன் லூரன்ஸ், ஃபே கவ்லிங், கெய்லா ரெய்னெகே (கேப்டன்), கராபோ மெசோ, மைக்கே வான் வூர்ஸ்ட், செஷ்னி நாயுடு, லுயாண்டா நுசுசா, ஆஷ்லி வான் விக், மோனாலிசா லெகோடி, என்தாபிசெங் நினி, டயரா ரம்லகன், ஜே லீ ஃபிலாண்டர், டீட்ரே வான் ரென்ஸ்பர்க், சேனல் வென்டர்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஐசிசி யு -19 மகளிர் டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
நேரில் கண்டு ரசித்த ஜெய் ஷா
யு-19 பைனல் போட்டியை ஐசிசி தலைவர் ஜெய் ஷா நேரடியாக சென்று கண்டு களித்தார்.
ஐ.சி.சி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும், இதில் தேசிய பெண்கள் 19 வயதுக்குட்பட்ட அணிகள் போட்டியிடுகின்றன. முதல் போட்டி ஜனவரி 2023 இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது, போட்டிகள் இருபது20 கிரிக்கெட் வடிவத்தில் நடத்தப்பட்டன. 2வது யு-19 டி20 மகளிர் உலகக் கோப்பை போட்டி மலேசியாவில் நடத்தப்பட்டது.

டாபிக்ஸ்