Matthew Wade: 'வாங்குன அடி அப்படி..' போட்டி முடிந்ததும் சந்திக்க மறுத்த ஆஸி கேப்டன்!
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலிய அணி இரண்டாவது டி20 கிரிக்கெட்டிலும் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து போட்டிக்கு பிந்தைய நிகழ்ச்சியில் ஆஸி., கேப்டன் வேட் பங்கேற்காமல் புறக்கணித்தார். இது அவர் அதிருப்தியில் இருப்பதை உணர்த்துவது போல் இருந்ததாக கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது. இதைத் தொடர்ந்து நேற்றிரவு திருவனந்தபுரத்தில் 2வது டி20 ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அரை சதங்களை விளாசினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை எடுத்தது இந்தியா.
இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா சேஸிங் செய்தது. ஆனால், அந்த அணியால் 191 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களில் சரணடைந்தது ஆஸி.
இந்திய பவுலர்கள் பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்ணோய் ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
போட்டிக்கு பிறகு ஆட்டநாயகன் விருது வழங்கப்படும். அதேபோன்று வெற்றி பெற்ற அணியின் கேப்டன், தோல்வி அடைந்த அணியின் கேப்டனின் கேள்விகள் எழுப்பப்படுவது வழக்கம்.
ஆனால், அந்த நிகழ்வை புறக்கணித்தார் மேத்யூ வேட். தொகுப்பாளர் முரளி கார்த்திக் கூறுகையில், ஆஸி கேப்டன் துயரத்தில் இருப்பதாகவும், ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளரான ஆண்ட்ரே போரோவெக் நமக்கு தோல்விக்கான காரணத்தை விளக்குவார் என்றும் கூறினார்.
முதல் ஆட்டத்தில் மேத்யூ வேட்-க்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் சிறப்பாக பேட்டிங் செய்து 23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தபோதிலும் அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. அதற்குள் ஓவர்கள் முடிந்துபோனது.
இதனால் அவர் அதிருப்தியுடனும் ஏமாற்றத்துடனும் பெவிலியன் திரும்பினார். இதன்காரணமாகவே அவர் போட்டிக்கு பிந்தைய நிகழ்வை தவிர்த்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
டாபிக்ஸ்