IND vs AUS: வெள்ளை பந்து கிரிக்கெட் தொடர்.. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செல்லும் இந்தியா - அட்டவணை விவரம்
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு தயாராகும் விதமாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட தொடரிவில் விளையாட இருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025 தொடர் முடிந்தவுடன் வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செல்லும் இந்தியா ஒரு நாள் மற்றும் டி20 என வெள்ளை பந்து கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது.
அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு முன் தயாராகும் விதமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டி20 தொடர் அமையும் என கூறப்படுகிறது.
ஒரு நாள் தொடர் அட்டவணை
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி அக்டோபர் 19ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. இதன் பின்னர் இரண்டாவது ஒரு நாள் போட்டி அக்டோபர் 23ஆம் தேதி அடிலெய்டிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 25ஆம் தேதி சிட்னியிலும் வைத்து நடைபெறுகிறது.
மேலும் படிக்க: அதை உணர்ந்ததும் வெளியேறுவேன்.. ஓய்வு பற்றி மனம் திறந்த கோலி
வெவ்வேறு மைதானங்களில் டி20 தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடர் இந்த முறை 5 வெவ்வேறு மைதானங்களில் நடக்கவுள்ளது. முதல் டி20 போட்டி அக்டோபர் 29ஆம் தேதி கேன்பெர்ராவில் தொடங்குகிறது. இரண்டாவது டி20 போட்டி அக்டோபர் 31ஆம் தேதி மெல்போர்னிலும், மூன்றாவது டி20 போட்டி நவம்பர் 2ஆம் தேதி ஹோபார்டிலும், நான்காவது டி20 போட்டி நவம்பர் 6ஆம் தேதி கோல்ட்கோஸ்டிலும் நடக்கிறது. கடைசி டி20 போட்டி நவம்பர் 8ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெற இருக்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இதுவரை
வெள்ளை பந்து கிரிக்கெட்டை பொறுத்தவரை இரு அணிகளுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவும், டி20 கிரிக்கெட்டில் இந்தியாவும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 152 ஒரு போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 84 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 58 போட்டிகளில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் 32 முறை நேருக்கு நேர் பலப்பரிட்சை செய்துள்ளன. இதில் இந்தியா 20 முறையும், ஆஸ்திரேலியா 11 முறையும் வென்றுள்ளது. ஒரு போட்டி முடிவு இல்லாமல் இருந்துள்ளது.
கோலி, ரோஹித், ஜடேஜா இல்லாத தொடர்
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த தொடருக்கு முன்னர் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் தயாராகும் விதமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.
கடைசியாக கடந்த 2021இல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடியது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இதன் பிறகு 2022, 2023 ஆகிய ஆண்டுகள் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே உள்நாட்டில் நடந்த டி20 தொடரிலும் இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன், கடந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பா தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
